2012-11-28 16:02:28

நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இளம்பிள்ளைவாதம் ஒரு கொள்ளை நோயாக உள்ளது


நவ.28,2012. நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோ நோய்கெதிரான தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று நிரூபித்தால் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உலகளவில் போலியோ நோயை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த மூன்று நாடுகளில் இளம்பிள்ளைவாதம் ஒரு கொள்ளை நோயாக உள்ளது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
அனைத்துலக அளவில் போலியோ ஒழிப்பைக் கண்காணிக்கும் Global Polio Eradication Initiative என்ற அமைப்பு, இம்மூன்று நாடுகளில் இருந்தும் யாராவது ஒருவர் பயணம் மேற்கொண்டால், அதன் மூலம் போலியோ கிருமி ஏற்றுமதியாகும் ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இனி, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் எல்லையை கடக்கும் முன்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
உலகின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இளம்பிள்ளைவாத நோய் ஏறத்தாழ ஒழிக்கப்பட்டுவிட்டது.








All the contents on this site are copyrighted ©.