2012-11-28 15:41:57

திருஅவையில் திருப்புமுனைகள் – புனித காத்ரீன் லபுரே


நவ.28,2012. Miraculous Medal - புதுமை பதக்கம் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமான ஒரு புனிதப் பொருள். முட்டை வடிவமாக இருக்கின்ற இந்தப் பதக்கத்தின் முன்பக்கத்தில் அன்னைமரியா இரு கரங்களை விரித்தபடி இருக்கிறார். உள்ளங்கைகளை மேல்பக்கமாகத் திருப்பி அவற்றிலிருந்து ஒளிக்கதிர்கள் வருவது போல் இருக்கின்றன. அன்னைமரியாவின் பாதங்கள் அலகையை மிதித்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பதக்கத்தின் மறு பக்கத்தில் “M” என்ற ஆங்கில எழுத்து எழுதப்பட்டு அதன்மேல் சிலுவை வரையப்பட்டிருக்கின்றது. அதற்குக்கீழ் இரண்டு இதயங்கள் இருக்கின்றன. ஓரம் முழுவதும் 12 விண்மீன்களைக் குறிக்கும் சிறு சிறு விண்மீன்கள் இருக்கின்றன. ‘M’ என்ற ஆங்கில எழுத்து மேரி என்பதை மட்டுமல்ல, அன்னையையும் குறிக்கின்றது. இதிலுள்ள இரண்டு இதயங்கள், இயேசு மற்றும் மரியாவின் திருஇதயங்களாகும். எனவே இந்தப் பதக்கத்திலுள்ள சின்னங்கள் மீட்பு வரலாற்றை எடுத்துச் சொல்கின்றன. இந்தப் பதக்கத்தை கழுத்தில் அணிந்திருப்பதோடு, “பாவமின்றி பிறந்த மரியே, உம்மிடம் விண்ணப்பிக்கும் எமக்காக வேண்டிக் கொள்ளும்” என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் செபிப்பவர்கள் வாழ்க்கையில் அற்புதங்களைப் பெறுள்ளார்கள் என்பது வரலாறு.
கோமான் Dominique de Riom என்பவரைச் சந்தித்து அவர் தனது பாவங்களுக்காக மனம் வருந்தச் செய்ய வேண்டுமென்று பேராயர் தெ கெலென் பல தடவைகள் முயற்சித்தார். ஆனால் அவர் பேராயரை ஏமாற்றிக் கொண்டே இருந்தார். ஒருநால் இந்தப் புதுமை பதக்கத்தைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு Baronஐப் பார்க்கச் சென்றார். அச்சமயத்தில் அன்னையின் திருவருளால் தொடப்பட்ட Baron, தனது பாவங்களுக்காக மனம் வருந்தி ஒப்புரவு திருவருட்சாதனத்தைப் பெற்றார். அடுத்த நாள் பேராயரிடமிருந்து அருள்சாதனங்களைப் பெற்று அவரது கரங்களில் 1837ம் ஆண்டில் காலமானார் Baron. அதேபோல், 1842ம் ஆண்டு சனவரி 20ம் தேதியன்று Alphonse Ratisbonne என்ப வர் மனம் மாறக் காரணமாக இருந்ததும் இந்தப் புதுமை பதக்கம் என்றே வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. Alphonse கத்தோலிக்க மதத்தைக் கடுமையாக எதிர்த்தவர். ஆயினும் அந்த சனவரி 20ம் தேதியன்று இந்தப் புதுமைப் பதக்கத்தின் அன்னைமரியாவை அத்தனை அழகுடன் காட்சியில் கண்டார். அன்றிலிருந்து அவரது வாழ்க்கை முழுவதும் மாறியது. அப்போதைய கர்தினால் பத்ரிசி அல்போன்சின் வாழ்க்கையை கவனமுடன் ஆராய்ந்த பின்னர் அவரைக் கத்தோலிக்கத்தில் சேர்த்துக் கொண்டார். பின்னர் அல்போன்ஸ் குருவாகி முப்பது ஆண்டுகள் அவரின் சொந்த மண்ணாகிய புனித பூமியில் பணி செய்தார்.
இந்தப் புதுமைப் பதக்கத்துக்கும் புனித காத்ரீன் லபுரேவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1806ம் ஆண்டு மே 2ம் தேதி பிரான்சின் Burugundy மாநிலத்தில் பிறந்த காத்ரீன் லபுரேயின் திருமுழுக்குப் பெயர் Zoe Labouré. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், அக்குடும்பத்தின் 11 பிள்ளைகளில் ஒன்பதாவது பிள்ளை. ஜோவுக்கு 9 வயது நடந்த போது அவரது தாய் இறந்தார். புனித அன்னைமரியா மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த ஜோ, தனது தாயின் இறப்புக்குப் பின்னர், தன்னிடமிருந்த அன்னைமரியா திருவுருவத்தை முத்தி செய்து, தாயே, இனிமேல் நீர்தான் எனக்குத் தாய் என்று சொன்னார். புனித வின்சென்ட் தெ பால் அவர்களைக் கனவில் கண்ட பின்னர், அப்புனிதர் தொடங்கிய பிறரன்புப் புதல்வியர் சபையில் இளம் வயதில் சேர்ந்தார். பாரிஸ் நகரின் Rue du Bac எனுமிடத்தில் அச்சபையின் நவதுறவு இல்லத்தில் சேர்ந்தார். காத்ரீன் என்ற புதுப் பெயரையும் பெற்றார். இந்த நவதுறவு வாழ்க்கையில் திருநற்கருணையில் கிறிஸ்து பிரசன்னமாய் இருப்பதையும், மூவொரு இறைவன் திருவிழா ஞாயிறன்று கிறிஸ்து அரசரையும் காட்சியில் கண்டார். அதன்பின்னர் அந்தப் புகழ்பெற்ற மூன்று காட்சிகள் இடம்பெற்றன. இக்காட்சிகளில் அன்னைமரியாவைக் கண்டார் காத்ரீன்.
1830ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி இரவு உலகின் வரலாற்றை மாற்றிய இரவாகும். அது நவீன சகாப்தத்தில் அன்னைமரியா நுழைந்த இரவாகும். 1530ம் ஆண்டில் மெக்சிகோ நாட்டு குவாதாலுப்பேயில் அன்னைமரியா காட்சி கொடுத்த ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பாரிசில் அந்த இரவில் அன்னைமரியாவின் காட்சிகள் தொடங்கின. 24 வயது நவதுறவியாகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காத்ரீன் லபுரே அன்று இரவு பெரிய ஓர் பிற நவதுறவியரோடு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மெல்லிய குரல் தன்னைப் பல தடவைகள் கூப்பிடுவதைக் கேட்டு விழித்தார் காத்ரீன். அப்போது ஏறக்குறைய 5 வயது மதிக்கத்தக்க ஓர் அழகான, ஒளிமயமான குழந்தையைக் கண்டார். அக்குழந்தை காத்ரீனிடம், எழுந்து சிற்றாலயத்துக்கு வா, அங்கே புனித கன்னிமரியா உனக்காகக் காத்திருக்கிறார் என்று சொன்னது. அக்குழந்தை காத்ரீனின் காவல்தூதர். அவரைப் பின்தொடர்ந்து நடந்து சென்றார் காத்ரீன். அங்கே ஆலயம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது. அங்கே பீடத்தின் அருகே சென்று, அருள்சகோதரிகளுக்குத் தியான உரைகள் கொடுக்கும் இயக்குனர் அமரும் நாற்காலி அருகே முழந்தாளிட்டார். திடீரென சலசலக்கும் சில்க் ஆடை சப்தத்தைக் கேட்டார். தன்னை நோக்கி மிக அழகான பெண்ணொருவர் நடந்து வருவதைக் கண்டார். அந்தப் பெண், தந்த நிற ஆடை அணிந்து, நீலநிற நீண்ட மேலாடை போர்த்தி வெல்ளைத் துணியால் தனது தலையை மூடி, அது தோள்பட்டைகள் வழியாகத் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். அந்தப் பெண் அந்த நாற்காலியில் காத்ரீனுக்கு அருகில் அமர்ந்தார். அந்த வானதூதர் காத்ரீனிடம், இவரே புனித கன்னிமரி என்றது. காத்ரீனும் தனது கரங்களை அன்னைமரியாவின் தொடையில் வைத்தபடி அந்த அன்னையின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அன்னைமரியா காத்ரீனிடம் பேசினார்...
எனது குழந்தையே, நல்ல கடவுள் உன்னிடம் ஒரு பணியைக் கொடுப்பதற்கு விரும்புகிறார். இந்தப் பணியைச் செய்வதில் பல துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆயினும் கடவுளது மகிமைக்காகப் பணி செய்கிறேன் என்ற உணர்வு ஆறுதலாக இருக்கும். நம் ஆண்டவர் இயேசு உந்னோடு இருந்து உன்னை வழிநடத்துவார். நம்பிக்கையோடு இரு. அஞ்சாதே. அந்தப் பணி பின்னால் வெளிப்படுத்தப்படும். காலங்கள் தீமை நிறைந்தனவாக உள்ளன. பிரான்சுக்குத் துன்பங்கள் வரும். அரசரின் ஆட்சிக் கவிழ்க்கப்படும். திருச்சிலுவை தூக்கி வீசப்பட்டு நசுக்கப்படும். பேராயர் தனது ஆடைகளைக் கிழித்துக் கொள்வார். தெருக்களில் இரத்தம் ஓடும். நம் ஆண்டவரின் விலா மீண்டும் குத்தித் திறக்கப்படும். உலகம் முழுவதும் கொடுந்துன்பங்களால் அறையப்படும். இவ்வாறு சொன்ன அன்னைமரியா தனது பாதத்தை ஆலயப்பீடத்தை நோக்கியபடி வைத்தார். அவரது முகமும் வருத்தமாக இருந்தது. மீண்டும் பேசினார் அன்னைமரியா.
ஆலயப் பீடத்துக்கு வா. தன்னிடம் வரம் கேட்பவர்களுக்கு இவ்விடத்தில் வரங்கள் அருளப்படும் என்றார். பாரிஸ் பேராயர் கொல்லப்படுவார். பல துறவு சபைகளிலும் குருக்கள் மத்தியிலும் பலர் பலியாகுவார்கள் என்றார். அன்னைமரியா இவையனைத்தையும் சொன்ன பின்னர் மறைந்து விட்டார். காத்ரீனை அவர் தூங்கும் அறைவரை அழைத்துச் சென்ற வானதூதரும் மறைந்து விட்டார். அப்போது சுவர்க்கடிகாரம் அதிகாலை 2 மணியைக் காட்டியது.
அன்னைமரியாவின் இறைவாக்குப் பலித்தது. இந்தக் காட்சி நடந்த ஒரு வாரத்துக்குப் பின்னர், 1830ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பாரிசில் ப்ரெஞ்ச் புரட்சி வெடித்தது. அரசர் 10ம் சார்லஸ் ஆட்சியிழந்தார். கும்பல்கள் ஆலயங்களை அவமானப்படுத்தி திருவுருவங்களை அழித்தன. திருச்சிலுவைகள் தூக்கி வீசப்பட்டன. ஆயர்களும் குருக்களும் கைது செய்யப்பட்டனர். அடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும், 1848ம் ஆண்டில் மீண்டும் புரட்சி வெடித்தது. பேரரசர் லூயிஸ் பிலிப் ஆட்சியிழந்தார். இதற்கு 40 ஆண்டுகள் கழித்து 1870ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் புரட்சி. ப்ரெஞ்ச் பேரரசர் 3ம் நெப்போலியனின் அரியணை வீழ்ந்தது.
இறைவன் காத்ரீனிடம் கொடுக்க விரும்பிய மறைப்பணி 1830ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளிப்படுத்தப்பட்டது. இந்தக் காட்சி 1830ம் ஆண்டுக்கும் 1831ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் ஆறு தடவைகள் இடம் பெற்றது. அதுதான் பாவமின்றி பிறந்த அன்னைமரியின் புதுமைப் பதக்கத்தை விநியோகிப்பதாகும். அந்த நாள் திருவருகைக்கால முதல் ஞாயிறுக்கு முந்தைய சனிக்கிழமையாகும். மாலை 5.30 மணிக்கு அருள்சகோதரிகள் அனைவரும் ஆலயத்தில் மாலை செபத்திற்காகக் கூடியிருந்த போது திடீரென காத்ரீனுக்கு அன்னைமரியா தோன்றினார். அவர் உலக உருண்டையின்மீது நின்று கொண்டிருந்தார். நீண்ட வெள்ளை முக்காடை அணிந்திருந்த அவர் கையில் பொன்னிற உலக உருண்டையை வைத்திருந்தார். அதிலிருந்து கதிர்கள் வீசின. தன்னிடம் வரம் கேட்பவர்க்கு வழங்கும் அருளே அக்கதிர்கள் என்று அன்னைமரியா சொன்னார். பின்னர் காட்சி மாறியது. அன்னைமரியா வெண்மைநிற ஆடையும் நீலநிற மேலாடையையும் அணிந்திருந்தார். உலக உருண்டையின் மீது நின்று கொண்டிருந்தார். முட்டை வடிவத்தில் இருந்த அதைச் சுற்றித் தங்கநிற எழுத்துக்களில் “பாவமின்றி பிறந்த மரியே, உம்மிடம் விண்ணப்பிக்கும் எமக்காக வேண்டிக் கொள்ளும்” என்று எழுதப்பட்டிருந்தது. இதுவே அந்தப் புதுமைப் பதக்கமாகும்.
காத்ரீன் தனது ஆன்ம குருவிடம் அனைத்துக் காட்சிகளையும் விளக்கினார். காத்ரீனின் நடையுடை பாவனைகளை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கவனித்து வந்த அந்தக் குரு, காத்ரீன் சொன்னவை அனைத்தும் உண்மை என அறிந்தார். எனவே பாரிஸ் பேராயரிடம் காத்ரீனின் பெயரைச் சொல்லாமலே அந்தப் புதுமைப் பதக்கம் பற்றிச் சொன்னார். இந்தப் பதக்கத்தை அணிபவர்கள் பெரும் வரங்களைப் பெறுவார்கள் என்று அன்னைமரியா சொன்னதையும் கூறினார். 1832ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி இரண்டாயிரம் பதக்கங்கள் முதன்முறையாக விநியோகிக்கப்பட்டன. இந்தப் பக்தி வேகமாகப் பரவிய விதமே ஒரு புதுமையாக இருந்தது. 1876ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இறந்தார் காத்ரீன் லபுரே. அந்தப் புதுமைப் பதக்கத்தைக் காட்சியில் கண்டவர் காத்ரீன்தான் என்பது அவர் இறப்பதற்கு முன்னர் இல்லத் தலைவரிடம் அவர் சொன்ன பிறகே மற்றவர்க்குத் தெரிய வந்தது. இதையும் அன்னைமரியாவின் அனுமதியுடனே சொன்னார் காத்ரீன். திருத்தந்தை 11ம் பத்திநாதர் 1933ம் ஆண்டு மே 28ம் தேதி காத்ரீனை முத்திப்பெற்றவர் எனவும், திருத்தந்தை 12ம் பத்திநாதர் 1947ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி அவரைப் புனிதர் எனவும் அறிவித்தனர். புனித காத்ரீன் லபுரே திருவிழா நவம்பர் 28ம் தேதியாகும்.
அன்பர்களே, “பாவமின்றி பிறந்த மரியே, எமக்காக வேண்டிக் கொள்ளும்” என்று நாமும் செபிப்போம். தம்மை அண்டிவரும் பிள்ளைகளாகிய நம்மை அன்னைமரியா ஒருபோதும் கைவிட மாட்டார்







All the contents on this site are copyrighted ©.