2012-11-28 15:51:21

கத்தோலிக்கக் கண்ணோட்டத்துடன் புலம்பெயர்தல் பிரச்சனையை நாம் சந்திக்கவேண்டும் - வத்திக்கான் உயர் அதிகாரி


நவ.28,2012. நாடுவிட்டு நாடு செல்லும் பாரம்பரியம் கத்தோலிக்கத் திருஅவையின் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரியான கர்தினால் Antonio Maria Veglio கூறினார்.
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்களின் கூட்டம் ஒன்று நவம்பர் 27, இச்செவ்வாய் முதல் வியாழன் முடிய உரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின் துவக்கவிழாவில் புலம்பெயர்ந்தோர் பணி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Veglio உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.
வரலாற்றில், கிறிஸ்தவர்கள் நாடு விட்டு நாடு சென்ற வேளையில், நற்செய்தியையும் தங்களுடன் எடுத்துச் சென்றதால், கிறிஸ்தவ மறை உலகெங்கும் பரவியது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Veglio, தற்காலச் சூழலில் நாடுகளுக்கிடையே உள்ள எல்லைக் கோடுகள் பல்வேறு காரணங்களால் மாற்றப்பட்டு, அல்லது அழிக்கப்பட்டு வருவதையும் நாம் காண முடிகிறது என்று கூறினார்.
நாடுகளுக்கிடையே அமைதியற்ற நிலை அதிகரித்து வருவதால், புலம்பெயர்தல் என்பதும் பெரும் பிரச்சனையாக வளர்ந்துள்ளது என்று கூறிய கர்தினால் Veglio, கத்தோலிக்கக் கண்ணோட்டத்துடன் இப்பிரச்சனையை நாம் சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் 25 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.