2012-11-27 15:33:42

லெபனன் காரித்தாஸ் : லெபனனில் ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கின்றனர்


நவ.27,2012. அரசியலில் ஆழமான பிளவுகளும் வன்முறைகளும் இடம்பெற்றுவரும் லெபனன் நாட்டில், 22 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் வேலையின்றி உள்ளனர், ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது என அந்நாட்டுக் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம் கூறியது.
அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கையால் திணறிக் கொண்டிருக்கும் லெபனன் நாட்டுக்கு உதவிக்காக விண்ணப்பித்துள்ள அந்நாட்டுக் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனத் தலைவர் அருள்திரு Simon Faddoul, லெபனன் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்கின்றனர், இது உண்மையான எண்ணிக்கை என்று தெரிவித்தார்.
1975ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டுவரை லெபனனில் இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையினால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானப் பகுதிகளில் கடந்த இருபது ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டது, ஆனால் இந்தப் பணிகள் அரசைக் கடனாளியாக்கியுள்ளன மற்றும் வளர்ச்சியையும் மந்தமாக்கியுள்ளன.
லெபனனின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த அருள்திரு Simon, காரித்தாசின் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவிகளுக்கும் விண்ணப்பித்தார்.
முதியோர்களுக்கு அதிகம் உதவி தேவைப்படுகின்றது என்றும் அக்குரு கூறினார்.








All the contents on this site are copyrighted ©.