2012-11-26 15:02:02

வாரம் ஓர் அலசல் - பணம் படைத்த நாடுகளில்கூட ஏழ்மை ஏன்?


நவ.26,2012 RealAudioMP3 . சாமுராய். வாள் வீச்சில் அவருக்கு நிகர் அவரே. ஒருநாள் இவரது படுக்கையறையில் ஒரு சுண்டெலி புகுந்து கொண்டது. அது விடிய விடிய எதையோ சுரண்டிக் கொண்டிருந்தது. தூக்கம் கெட்டுத் துக்கமானார் சாமுராய். கடுங்கோபத்தில் அந்த எலியைக் கொல்ல வாளெடுத்தார். விரட்டி விரட்டி வெட்ட முயன்றார். ஆனால் அது தப்பியோடியது. சாமுராயும் விடவில்லை. வீடு அலங்கோலப்பட்டதுதான் மிச்சம். சாமுராயால் அந்த எலியைக் கொல்ல முடியவில்லை. சோர்ந்து போய் அமர்ந்து விட்டார். அப்போது அவரது மனைவி சொன்னார் : “என்னங்க நீங்க.... யாராவது எலியைப் போய் வாளால் வெட்டுவார்களா? ஒரு பூனையைப் பிடித்துக் கொண்டுவந்து விட்டால் அது எலியைப் பிடித்துவிடப் போகிறது” என்று. உடனடியாக அரண்மனைப் பூனை கொண்டு வரப்பட்டது. எலியைப் பார்த்திராத பூனை அது. எனவே பயந்தபடியே எலியின் பக்கத்தில் போனது. பூனையைக் கண்டதும், எலி தனது கூரிய பல்லை வெளியே காட்டியபடி சீறி நின்றது. உடனே அந்தக் கொழுகொழு அரண்மனைப்பூனை பயந்து ஒடுங்கிப் போய் ஒளிந்து கொண்டது. மூத்த அமைச்சர் ஒருவர் சொன்னார் : “அரண்மனைப்பூனை அழகுக்குத்தான். பசியறியாப் பூனை எலிக்குப் பயப்படத்தான் செய்யும். காட்டுப்பூனை ஒன்றை விட்டுப்பாருங்கள்” என்று. காட்டுப்பூனையும் கொண்டுவரப்பட்டது. அது அறைக்குள் புகுந்த அரைநொடியில் வாயில் அந்த எலியுடன் வெளியே வந்தது. அப்போது அரண்மனைப்பூனை, காட்டுப்பூனையைத் தடுத்து நிறுத்தி, “அதெப்படி உன்னால் மட்டும் முடிந்தது? என்னால் முடியவில்லையே?” என்று கேட்டது. வாயில் கவ்விய அந்தச் சுண்டெலியைக் காலில் மிதித்தபடியே காட்டுப்பூனை சொன்னது : “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஒரு பூனை. எலி பிடித்தால் எனது வயிறு நிரம்பும். அவ்வளவுதான்” என்று.
பசித்த பூனைக்கு வயிறை நிரப்ப வழி தெரிகிறது. ஆனால் பசித்த மனிதர்கள், பசியைப் போக்க வழியில்லாமல் இன்றும் உலகில் தினமும் 25 ஆயிரம் பேர் இறக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே 50 இலட்சம் சிறார் பசியால் இறக்கின்றனர். 87 கோடிப் பேருக்குச் சாப்பிடுவதற்குப் போதுமான உணவு இல்லை. இவர்களில் 98 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். ஆசியாவிலும் ஓசியானியாவிலும் மட்டுமே 56 கோடியே 40 இலட்சம் பேர் பசியால் வாடுகின்றனர். உலகின் மக்கள்தொகையில் பாதிக்கும் சற்றே அதிகமாக இருக்கின்ற பெண்கள், உலகில் பசியால் வாடுவோரில் 60 விழுக்காட்டுக்கு அதிகமானோராய் இருக்கின்றனர். வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 15 விழுக்காட்டினர் அதாவது ஏறக்குறைய 85 கோடிப் பேர் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள். இவ்வாறு, FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் இந்த 2012ம் ஆண்டில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், உலகின் மிக வறிய மூன்று நாடுகளில் ஒன்றான ஜிம்பாபுவேயில் 80 விழுக்காட்டினர் வேலைவாய்ப்பற்றவர்கள். இந்நாட்டில் 75 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் தற்போது வறுமைக்கோட்டுக்குக் கீழ், அதாவது ஒரு நாளைக்கு 1.25 டாலருக்கும் குறைவான ஊதியத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
உலக அளவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதற்குப் பின்னரும், உலகில் வறுமை இன்னும் நிலைத்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி வறுமையை ஒழிப்பதற்கு முதல் தீர்வு எனப் பல பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆயினும், தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட, அண்மைப் பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியினால் வெகு சில செல்வந்தர்களே பயன் அடைந்திருக்கிறார்கள். அந்த வளர்ச்சியினால் சாதாரணத் தொழிலாளர் எந்தப் பயனையும் அடையவில்லை. இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள், வளர்ச்சியில் துரித வேகத்தைக் கொண்டு, தங்களின் கோடீஸ்வரர்களை உருவாக்கியிருந்தாலும், இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியாலும் பயன் அடைந்திருப்பது மிகச் சிலரே. “என்ன வளமில்லை இந்த நாட்டில்”! என்று மகாகவி பாரதி பாடிய இந்தியாவில், தேசிய அளவில் 26 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்களும், பீஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய நான்கு ஏழை மாநிலங்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டு மக்களும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். இன்று இந்தியா எதிர்நோக்கும் கடும் பிரச்சனைகளில் ஒன்று வறுமை என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. பொருளாதார வளர்ச்சியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் சீனாவிலும் மூன்று கோடிப் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். அந்நாட்டில் மேலும் ஆறு கோடிப் பேர் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான ஊதியத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஏழை நாடுகளில்தான் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்றால் பணக்கார நாடுகளிலும் வறுமை ஒழிக்கப்படவில்லை. இந்த உரோமை மாநகரில்கூட பசிக்குது என்று கைநீட்டிக் காசு கேட்பவர்களை, சாலையோரங்கள், ஆலய வாசல்கள், பாதாள இரயில்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்லும் இடங்கள் எனப் பல பொது இடங்களில் காண முடிகின்றது. எனவே ஏழ்மைக்குக் காரணம் என்ன?
உலகில் வளமிருந்தும், வளர்ச்சியிருந்தும், வறுமையை ஏன் இன்னும் ஒழிக்க முடியவில்லை? உலகில் ஏழ்மைப் பிரச்சனை ஏன் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றது? இதற்குக் காரணம் இன்றைய மனிதரின் மாறுபட்ட மதிப்பீடுகள். இக்காலத்தில் மனிதர் தன்னலம், செல்வம் சேர்ப்பு, பேராசை, சாதிக்க வேண்டுமென்ற வெறி ஆகிய மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், இவைதான் ஏழ்மைக்குக் காரணங்கள். இன்று உலகில் ஆண்டுக்கு 35 இலட்சம் சிறார் ஊட்டச்சத்துக் குறைவால் இறக்கின்றனர். இந்த ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, 20 கோடிக்கு மேற்பட்ட இளையோரை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. இதனால் நாடுகளின் வருங்கால வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 35 கோடி டாலர் தேவைப்படுகின்றது. ஆனால் அதற்குப் பணம் இல்லை என்கின்றனர். அதேநேரம் வங்கிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கும்போது அவற்றைச் சரிக்கட்டுவதற்குப் பணம் இருக்கின்றது. இந்தப் பணமெல்லாம் குடிமக்களின் வரிப்பணம்தான். இவ்வாறு விவரிக்கிறார் தென்னாப்ரிக்காவின் “Jay” Naidoo (Jayaseelen). தென்மண்டல ஆப்ரிக்க வளர்ச்சி வங்கியின் தலைவர் என பல முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர் இவர். இன்று உலகம் நல்ல மதிப்பீடுகளுக்காக ஏங்குகிறது என்கிறார்“Jay” Naidoo...
“Jay” Naidoo மேலும் சொல்கிறார் : இன்று உலகில் வறுமையை ஒழிப்பதற்கு மனித சமுதாயத்துக்கு தன்னலமற்ற சேவையாற்றும் தலைவர்கள் தேவை. இன்றையத் தலைவர்கள் ஏழைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை, ஆனால் அமைப்புமுறைகளைக் கட்டிக்காப்பதற்கு கடும் முயற்சி எடுக்கிறார்கள். காந்திஜி, நெல்சன் மண்டேலா, பேராயர் டுட்டு, மார்ட்டின் லூத்தர் கிங் போன்ற தலைவர்கள் ஒருபோதும் கோடீஸ்வரர்களாக வாழவில்லை. இவர்கள், அறிவியல்மேதைகள், தொழில்நுட்ப நிபுணர்கள் போன்றவர்களும் அல்ல. ஆனால் இவர்கள் மக்களால் மதிக்கப்பட்டார்கள், பாராட்டப்பட்டார்கள். காரணம் இவர்கள் ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்டோருக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள். எனவே ஏழ்மை ஒழிக்கப்படுவதற்கு நல்ல மதிப்பீடுகளைக் கொண்ட தலைவர்கள் தேவை என்கிறார் “Jay” Naidoo
endPoverty.org என்ற ஓர் உலகளாவிய வறுமை ஒழிப்புத் திட்டம், இந்நாள்களில் இணையதளம், வானொலி, தொலைக்காட்சி எனப் பல ஊடகங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் ஏழ்மை ஏன்? அதிலிருந்து வெளிவருவது எப்படி? ஏழைகள் சுயமாக வாழ்வது எப்படி? என்பதற்கு அந்தந்த இடத்தின் பிறரன்பு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வுக் கல்வி, பல பயிற்சிப் பாசறைகள் போன்ற நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் இந்த உலகளாவியத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. வளரும் நாடுகளில் ஏழைக் குடும்பங்கள் வறுமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு உதவி செய்துள்ளது. எடுத்துக்காட்டாக, CGAP என்ற வறுமை ஒழிப்பு ஆலோசனைக் குழு, இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் 300 ஏழை கிராமப் பெண்கள் சிறுசேமிப்பு மூலம் பணம் சேர்க்கவும், தரமான வாழ்க்கையை அமைக்கவும் திறமையையும் அறிவையும் பெற உதவி செய்துள்ளது. அப்பெண்கள், தங்களையும் தங்களது குடும்பத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் அக்குழு கற்றுக் கொடுத்துள்ளது. அதேபோல் இந்தியாவின் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனமும் வறுமை ஒழிப்புக்கும் ஏழைக் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கும் அரும்பணிகளைச் செய்து வருகிறது. இந்திய காரித்தாஸ் நிறுவனத்தின் Partnership Support பிரிவின் தலைவர் திருவாளர் நெல்சன் சொல்கிறார்
இந்த நவம்பரில் தொடங்கியுள்ள இந்த உலகளாவிய வறுமை ஒழிப்புத் திட்டத்தில் வத்திக்கான் வானொலியின் பல மொழிப் பிரிவுகளும் பங்கெடுத்து வருகின்றன. அன்புள்ளங்களே, வறுமை, ஒரு சமூகப் பிரச்சனை. ஒருவேளை உணவுகூட இல்லை என்ற கொடுமையைவிட “தனிமையும், தான் அன்பு செய்யப்படவில்லையே என்ற உணர்வும்தான் மிகக் கொடிய வறுமை”யாகும். ஏழைகள் அரசு அலுவலகங்களிலும் பொதுவிடங்களிலும் சமுதாயங்களிலும் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்படுவது மிகப் பெரிய கொடுமை. குடும்பங்களில்கூட ஏழை உறவினர்கள் ஓரங்கட்டப்படுவதைக் காண முடிகின்றது. Eli Khamarov என்பவர் சொன்னது போன்று, ஏழ்மை, ஒருவர் செய்யாதக் குற்றத்திற்குத் தண்டனை பெறுவது போன்றது. Charles Darwin என்பவரும் சொன்னார் ஏழைகளின் துன்பம், இயற்கையான சட்டங்களால் இல்லாமல், நமது நிறுவனங்களால் ஏற்பட்டால் அப்போது நமது பாவம் பெரியது என்று. எனவே அன்புள்ளங்களே, ஏழ்மையை நம்மால் ஒழிக்க முடியும். அதற்கு நல்ல மனம் வேண்டும். வாழ்வில் துணிச்சல் வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். சொந்த வாழ்க்கையில் கருணை, பாசம், பிறரன்பு போன்ற நல்ல மதிப்பீடுகள் வேண்டும். குடிகாரக் கணவர்கள் திருந்த வேண்டும். ஆயுத மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
அன்புள்ளங்களே, ஏழ்மை ஏன்? ஏழ்மையை என்னால் ஒழிக்க முடியாதா? என்பன போன்ற கேள்விகளை அடிக்கடிக் கேட்டுப் பாருங்கள். ஏழ்மையை ஒழிப்பதற்கு என்னால் என்ன செய்ய முடியும்? எனச் சிந்தித்துப் பாருங்கள். உங்களது ஏழ்மை ஒழிப்புத் திட்டங்களை அஞ்சல் அட்டை மூலம் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
பசித்திருப்பவருக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன்பிடிக்க உதவி செய்வது மேல் அல்லவா!.







All the contents on this site are copyrighted ©.