2012-11-26 15:27:19

திருத்தந்தை : இவ்வுலகின் கவர்ச்சிகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக இறையாட்சிக்குச் சான்று பகரப் புதிய கர்தினால்களுக்கு அழைப்பு


நவ.26,2012. இறையாட்சிக்குச் சான்று பகரும், உண்மைக்குச் சான்று பகரும் சவால்நிறைந்த பொறுப்பு, என் அன்புச் சகோதரக் கர்தினால்களே, குறிப்பாக, இச்சனிக்கிழமையன்று உயர்த்தப்பட்ட புதிய கர்தினால்களே உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
அதாவது, இவ்வுலகின் கவர்ச்சிகள் மற்றும் அதிகாரங்களுக்கு எதிராக, இறைவனுக்கும் அவரது திட்டத்திற்கும் முன்னுரிமை கொடுப்பதை மிகத் தெளிவாகக் காட்டுவதற்குப் பணி செய்யுமாறு கர்தினால்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் ஆறு புதிய கர்தினால்களுடன் கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய போது மறையுரையாற்றிய திருத்தந்தை, இறையாட்சி, முற்றிலும் வித்தியாசமானது, இயேசுவின் சீடர்கள் இவ்வுலகின் மாயைகளுக்குத் தங்களை உட்படுத்தக் கூடாது, ஆனால் அவர்கள் இவ்வுலகில் உண்மையின் ஒளியையும் இறைவனின் அன்பையும் கொண்டு வர வேண்டுமென்று கூறினார்.
இயேசுவுக்கு எந்தவிதமான அரசியல் நோக்கங்களும் இருக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, இறையாட்சிக்கும், இவ்வுலக அரசுகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை தெளிவுபடுத்தினார்.
ஆயுதங்கள், வன்முறை, அதிகாரம் ஆகியவற்றால் அல்ல, ஆனால் அன்பில் அடித்தளத்தைக் கொண்டு, உண்மைக்குச் சான்று பகர்வதே இறையாட்சி என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, இறையாட்சியில் கிறிஸ்துவின் சீடராக இருப்பது, தங்களது வாழ்வை மாற்றி அன்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதாகும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.