2012-11-26 15:37:08

கேரள புதிய கர்தினாலுக்கு இந்திய மதத்தலைவர்களின் பாராட்டு


நவ.26,2012. மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் கடந்த சனியன்று திருத்தந்தையால் கர்தினாலாக உயர்த்தப்பட்டது, இந்திய நாட்டிற்கு ஒரு பெருமை தரும் மற்றும் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த நேரம் என வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய பேட்டியில் கூறினார் இந்துசமயக்குரு சுவாமி குருஇரத்தினம் ஞான தபசி.
அமைதி, இணக்க வாழ்வு மற்றும் ஆன்மீகத்தைத் தேடும் ஒவ்வொருவருக்கும் இந்த நிகழ்வு ஒரு சிறப்பான நேரம் எனவும் குறிப்பிட்டார் கேரளாவின் சாந்திகிரி ஆசிரமத்தின் சுவாமி குருஇரத்தினம்.
இந்த இந்து குருவுடன் வத்திக்கான் வைபவத்தில் கலந்துகொண்ட கேரளாவின் பாளையம் இஸ்லாமிய மதக்குரு Jamaluddin Maulavi Mankada பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக மதங்களிடையே ஒற்றுமையை உருவாக்க உழைத்துவரும் மலங்கரா ரீதித் தலைவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டதன் மூலம் மத இணக்கத்திற்கான பணி மேலும் பலம்பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் மார் பசிலியோஸ் கிளீமிஸ் கர்தினாலாக உயர்த்தப்பட்ட வத்திக்கான் திருப்பலியில் கலந்துகொண்ட திருவனந்தபுர மேயர் சந்திரிகா மற்றும் கேரள சட்டமன்றப் பிரதிநிதி பாலோடு இரவி ஆகியோரும் புதிய கர்தினாலின் பெருமைகள் குறித்து வத்திக்கான் வானொலியுடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.