2012-11-24 14:13:24

பேராயர் Roham : கிழக்கு சிரியாவின் நகரங்கள் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்


நவ.24,2012. கிழக்கு சிரியாவின் Kamishly, Hassaké ஆகிய நகரங்களில் அடைக்கலம் தேடியுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்வு தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று அந்நாட்டின் Jazirah மற்றும் Euphrates ஆர்த்தடாக்ஸ் பேராயர் Eustathius Matta Roham கேட்டுக் கொண்டார்.
அந்த நகரங்களில் புலம் பெயர்ந்துள்ள அப்பாவிப் பெண்கள், வயதானவர்கள், சிறார் உட்பட ஆயிரக்கணக்கான மக்களுக்கு மேலும் மனிதாபிமான நெருக்கடிகள் இடம்பெறாமல் இருப்பதைத் தவிர்க்கும் நோக்கத்தில் அப்பகுதிகளில் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார் பேராயர் Roham.
Kamishly, Hassaké ஆகிய இரு முக்கிய நகரங்கள் ஒவ்வொன்றிலும் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர், இவர்களில் ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்றும் பேராயர் ஃபிதெஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள செய்தி கூறுகிறது.
மேலும், சிரியாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புலம் பெயர்ந்துள்ள ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாருக்கு குளிர்காலத்துக்குத் தேவையான உடைகளை வழங்கத் தொடங்கியுள்ளது ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம்.







All the contents on this site are copyrighted ©.