2012-11-24 14:10:49

திருத்தந்தை : கர்தினால்கள் அவை திருஅவையின் உலகளாவிய தன்மையை உயர்த்திக் காட்டுகிறது


நவ.24,2012. திருஅவையின் உலகளாவிய தன்மையை நிறைவுசெய்யும் தனது திருப்பணியில் கர்தினால்கள், முதலும் முக்கியமுமான விலைமதிக்கப்பட்ட உடன்பணியாளர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 11 மணிக்குத் தொடங்கிய Consistory எனப்படும் புதிய கர்தினால்களின் திருநிலைப்பாடு திருவழிபாட்டில் மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருஅவையின் உலகளாவியதன்மை குறித்து இம்மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, உலகின் பல்வேறு மறைமாவட்டங்களைக் குறித்து நிற்கும் இந்தப் புதிய கர்தினால்கள், உலகளாவியத் திருஅவையை ஒன்றிணைக்கும் ஆன்மீகப் பிணைப்புக்களை வலிமைப்படுத்துகிறார்கள் என்று கூறினார்.
இப்புதிய கர்தினால்கள் இத்திருவழிபாட்டில் எடுக்கும் பதவிப்பிரமாணம் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, இவர்கள் பெறவிருக்கும் செந்நிறத் தலைப்பாகை, கிறிஸ்தவ விசுவாசத்திற்காகத் தங்களது குருதியையும் சிந்துவதற்குத் தயாராகும் அளவுக்கு இவர்கள் விசுவாசத்தில் உறுதியானவர்களாய் இருக்க வேண்டுமென்பதை நினைவுபடுத்துகின்றது என்று தெரிவித்தார்.
திருஅவையிடம் இப்புதிய கர்தினால்கள் கொண்டிருக்கும் அன்பு, திருத்தூதர்களின் இளவரசர் மீது இவர்கள் கொண்டிருக்கும் அன்பால் உறுதிப்படுத்தப்படுகின்றது என்பதை இவர்கள் பெறவிருக்கும் மோதிரம் நினைவுபடுத்துகின்றது என்று கூறினார் திருத்தந்தை.
இத்திருவழிபாட்டில், இந்தியாவின் சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் Baselios Cleemis Thottunkal, பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio Tagle, இன்னும், லெபனன், கொலம்பியா, நைஜீரியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகள் முறையே ஒரு பேராயர் என ஆறு பேருக்குச் செந்நிறத் தலைப்பாகை, மோதிரம் ஆகியவற்றையும் அணிவித்தார் திருத்தந்தை.
கடந்த அக்டோபர் 24ம் தேதி புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கேரளாவின் சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் Baselios Cleemis Thottunkal(53வயது), பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio Tagle(55 வயது), லெபனன் மாரனைட்ரீதித் தலைவர் பேராயர் Bechara Boutros al-Rahi (72 வயது), நைஜீரியப் பேராயர் John Onaiyekan(68 வயது), கொலம்பியப் பேராயர் Ruben Salazar Gomez (70 வயது), அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர் James Michael Harvey (63 வயது) ஆகிய ஆறு பேரைப் புதிய கர்தினால்களாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த பிப்ரவரியில் 16 ஐரோப்பியர்கள் உட்பட 22 பேரைக் கர்தினால்களாக உயர்த்தினார். இவர்களில் ஏழு பேர் இத்தாலியர்கள். ஆக மொத்தத்தில் இச்சனிக்கிழமையோடு திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 211 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 120 ஆகவும் உள்ளன.
பொதுவாக, கர்தினால்கள் “திருஅவையின் இளவரசர்கள்”என அழைக்கப்படுகின்றனர்.
இப்புதிய கர்தினால்கள் இஞ்ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று திருத்தந்தையோடு சேர்ந்து திருப்பலியும் நிகழ்த்துவார்கள்.
53 வயது நிரம்பிய கேரளாவின் புதிய கர்தினால் Baselios Cleemis Thottunkal திருஅவையிலுள்ள இளவயது கர்தினாலாகும்.
இந்நிகழ்வில் இந்திய நாடாளுமன்றத் தலைவர் P. J. Kurien, லெபனன் அரசுத்தலைவர் Michel Sleiman, பிலிப்பீன்ஸ் உதவி அரசுத்தலைவர் Jejomar C. Binay, நைஜீரிய செனட்டர் David Mark ஆகிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.