2012-11-22 15:47:07

கூடங்குளம் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் சேமிக்க முடிவு


நவ.22,2012. கூடங்குளம் அணுமின் நிலையம் எப்போது செயல்படத் துவங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், அந்த உலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள முன்னாள் தங்கச் சுரங்கங்களில் தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இப்புதனன்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் தோன்றிய வழக்கறிஞர் ரோஹிங்டன் நாரிமன் இத்தகவலைத் தெரிவித்தார்.
கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுவிட்ட நிலையில், அந்தச் சுரங்கங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றும், அணுக்கழிவுகளை சேமித்து வைக்க அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அரசு முடிவு செய்திருப்பதாகவும் ரோஹிங்டன் நாரிமன் தெரிவித்தார்.
அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளில் 97 விழுக்காட்டினை மறு சுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தத் திட்டமிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அணுக்கழிவுகளை எப்படி சுத்திகரிக்கப் போகிறார்கள், எப்படி சேமிக்கப் போகிறார்கள் என்ற விடயங்களில் அரசிடம் தெளிவான திட்டம் இல்லை என்று குற்றம் சாட்டினார்.
42 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீரை கடலில் இருந்து எடுத்து, பயன்படுத்திவிட்டு, அதை மீண்டும் கடலில் விடுவதாக அரசுத் தரப்புக் கூறுகிறது. அவ்வாறு விடப்பட்டால் கடல் வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், பாதுகாப்பு தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைத்த 17 அம்சங்களுக்கு, அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதை மனுவாகத் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.








All the contents on this site are copyrighted ©.