2012-11-20 14:55:21

விவிலியத் தேடல் - திருப்பாடல் 144


RealAudioMP3 சில ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த ஒரு பிரெஞ்ச் மொழி திரைப்படம் 'கரடி' (L'Ours). காட்டில் அனாதையாக்கப்பட்ட ஒரு குட்டிக் கரடி, மற்றொரு பெரியக் கரடியுடன் தன் உறைவை வளர்க்கிறது என்பதும், இவ்விரு கரடிகளையும் வேட்டையாடவரும் மனிதர்களிடமிருந்து இவை எவ்விதம் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன என்பதும்தான் கதை. இயற்கையாக, மிருகங்களை வைத்து தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் பல விருதுகள் பெற்றுள்ளது. இந்த அற்புதமானத் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளையே நான் பார்த்திருக்கிறேன். அக்காட்சிகளில் ஒன்று என் மனதில் ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அக்காட்சியை உங்களுக்கு விவரிக்க முயல்கிறேன்.

இக்காட்சியின் துவக்கத்தில் அந்தச் சின்னக்கரடி விளையாடிக்கொண்டிருக்கிறது. பெரியக் கரடி அருகில் இல்லை. அப்போது அங்கு வரும் ஒரு சிறுத்தை குட்டியைத் துரத்துகிறது. குட்டிக் கரடி பல வழிகளில் தப்பிக்க முயல்கிறது. இறுதியில் சிறுத்தையிடம் சிக்கிக் கொள்கிறது. அந்நேரத்தில், அந்தக் குட்டிக் கரடி தன் வலிமையை எல்லாம் திரட்டி சப்தமாகக் கர்ஜிக்கிறது. உடனே, சிறுத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு, குட்டியை விட்டு ஓடிவிடுகிறது. அந்தக் குட்டிக் கரடியின் கர்ஜனையைக் கேட்டு, சிறுத்தை பயந்து ஓடுவதைப் போல் அமைந்திருக்கும் அந்தக் காட்சியைக் காணும் நாம், காமிரா மெதுவாகப் பின்னோக்கி செல்லும்போதுதான் முழு உண்மையை உணர்கிறோம்.

அதாவது, குட்டிக் கரடியின் கர்ஜனையைக் கேட்டு, அந்தச் சிறுத்தை ஓடவில்லை, மாறாக, அந்தக் குட்டிக் கரடியின் பின்னே, பத்தடி தள்ளி நின்று, பெரிய கரடி உறுமிக்கொண்டிருப்பதைக் காமிரா காட்டுகிறது. பெரிய கரடியைக் கண்டுதான் சிறுத்தை ஓடிவிடுகிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம். தன் கர்ஜனையைக் கேட்டுத்தான் சிறுத்தை ஓடிவிட்டது என்ற பெருமிதத்துடன் குட்டிக் கரடி பெரியக் கரடியை நோக்கி ஓடுகிறது. சிறுத்தையின் கீறல் ஒன்றால் காயப்பட்ட அந்தக் குட்டிக்கரடியின் முகத்தை பெரியக் கரடி தன் நாவால் தடவி குணப்படுத்துவதாக அந்தக் காட்சி முடிவடைகிறது.

3.30 நிமிடங்கள் நடைபெறும் இந்தக் காட்சியை நான் பலமுறைப் பார்த்து, நம்பிக்கை அடைந்துள்ளேன். நான் வழிநடத்தும் தியானங்களில் இக்காட்சியைக் காட்டி, மற்றவர்கள் மனதில் நம்பிக்கை வளர உதவியிருக்கிறேன்.

தப்பிக்க ஒரு வழியுமே இல்லை என்ற அவநம்பிக்கை சூழும்போது, நமக்குப் பின்புலத்தில் இறைவன் ஒரு கற்பாறையாய் நின்று நம்மைக் காப்பார் என்ற எண்ணம் இந்தக் காட்சியின் வழியாக நான் பெறும் நம்பிக்கை எண்ணம். தாயின் மடியில் உறங்கும் ஒரு குழந்தை இவ்வுலகிலேயே மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக உணர்வதில்லையா? தந்தையின் தோள்களில் அமர்ந்து செல்லும் குழந்தை, இவ்வுலகில் தானே மிகவும் சக்திவாய்ந்தவன் என்று கற்பனை செய்வதில்லையா? அந்த ஓர் எண்ணத்தை இக்காட்சி என் மனதில் உருவாக்குகின்றது.

இந்த அற்புதமானக் காட்சியை இன்று என் நினைவுக்குக் கொணர்ந்தது, திருப்பாடல் 144. இன்று அகில உலகக் குழந்தைகள் நாள். சென்ற வாரம் புதனன்று இந்தியாவில் குழந்தைகள் நாளைக் கொண்டாடினோம். இவ்விரு கொண்டாட்டங்களையும் தொடர்ந்து இன்று குழந்தைகள் தொடர்பான ஓர் எண்ணத்தை நமக்குள் விதைத்திருப்பது திருப்பாடல் 144.

தாவீது சிறுவனாக இருந்தவேளையில், கோலியாத்து என்ற மனித மலையை வீழ்த்திய நிகழ்வை, தாவீது அடிக்கடி தன் நினைவில் அசைபோட்டிருக்கவேண்டும். அவர் அடிக்கடி அசைபோட்ட அந்த உணர்வுகள், திருப்பாடல்கள் பலவற்றில் வெளியாகியுள்ளன. அவற்றில் ஒன்று நாம் இன்று சிந்திக்கும் திருப்பாடல் 144. தாவீதும் கோலியாத்தும் சந்திக்கும் அந்தக் காட்சியை நாம் சாமுவேல் முதல் நூல் 17ம் பிரிவில் (41-51) வாசிக்கிறோம்.
கோலியாத்து வாள், ஈட்டி, கேடயம் என்ற பல கருவிகளின் பாதுகாப்பை நம்பி சண்டைக்கு வந்தபோது, தாவீது ஒரு கவணையும், கல்லையும் நம்பி அங்கு சென்றார். கவணையும், கல்லையும்விட, தன் பின்னே இறைவன் இருந்து தன்னைக் காப்பார், தனக்கு வெற்றி தருவார் என்பதை, தாவீது முழுமையாக நம்பினார். கோலியாத்து என்ற மனித மலையை வீழ்த்தி, வெற்றி பெற தன்னைப் பயிற்றுவித்தவர் ஆண்டவர்தான் என்பது தாவீது தன் வாழ்வில் அடிக்கடி நினைவுகூர்ந்த உண்மை. இப்பாடலின் ஆரம்ப வரிகள் இந்த எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.
திருப்பாடல் 144 1-2
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே!
-----------------------
கடந்த இருவாரங்களாய் நாம் சிந்தித்துவந்த 142, 143 ஆகிய இரு திருப்பாடல்களின் தொனிக்கும், இத்திருப்பாடலின் தொனிக்கும் உள்ள வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகள். தன் எதிரிகளால் 'தரையிலிட்டு நசுக்கப்பட்ட' தூசியைப்போல் உணர்ந்த தாவீது, இப்பாடலில் எழுந்து உறுதியாய் நிற்கிறார். அவரை நிற்கவைத்த இறைவனைப் புகழ்ந்து இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

இந்தப் புகழுரையில் தாவீது ஆண்டவருக்குத் தரும் உருவகங்கள்... கற்பாறை, கோட்டை, கேடயம், புகலிடம். இதையொத்த உருவகங்களை அவர் திருப்பாடல் 18லும் பயன்படுத்தியுள்ளார்.
திருப்பாடல் 18 2
ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.

'வெற்றிக்கு நன்றி' என்ற தலைப்புடன் எழுதப்பட்டுள்ள திருப்பாடல் 144ல், பல்வேறு எண்ணங்கள் வெளிப்பட்டாலும், இப்பாடலின் மையமாகக் கூறப்படும் ஓர் எண்ணம் வெளிப்படும் ஓர் உணர்வு நன்றி!
பல வேளைகளில் நாம் வெற்றிபெறும்போது, அந்த வெற்றிக்குக் காரணமானவர்களை மறந்துவிட்டு, ஏதோ நமது முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைத்ததைப் போல எண்ணக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. இந்த எண்ணத்திற்கு முற்றிலும் மாறாக, தாவீது தான் அடைந்த வெற்றிகளுக்கு இறைவனையே காரணமாக்கியுள்ளார். எனவே, நன்றியால் நிறைந்து பாடுகிறார்.

நன்றி என்ற அந்தச் சிறு சொல்லுக்குள் பல உணர்வுகள் பொதிந்துள்ளன. வருகிற வியாழனன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் "நன்றி நாள்" (Thanksgiving Day) கொண்டாடப்படுகிறது. இத்தருணத்தில் இப்பாடலை நாம் சிந்திப்பது பொருத்தமாகத் தெரிகிறது. நன்றிக்கென ஒரு நாளை ஒதுக்கவேண்டுமா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அன்புக்கு ஒருநாளை குறித்துவிட்டதுபோல் நன்றிக்கும் ஒரு நாளை ஒதுக்கி, அந்த உணர்வை வியாபாரமாக்கும் முயற்சியோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் எழும்போதும், மீண்டும் படுக்கச் செல்லும்போதும் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் மேலோங்கி இருக்க வேண்டிய ஓர் எண்ணம், உணர்வு நன்றிதானே!
------------------------
தன நன்றி உணர்வுகளுக்கு மையமான இறைவனை பாறையென்றும் கோட்டையென்றும் போற்றிய தாவீது, அடுத்த இரு சொற்றொடர்களில் மனித இயல்பைக் குறித்துப் பேசுகிறார். எதோ தத்துவம் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் தாவீது இவ்விதம் பேசவில்லை. அளவற்ற சக்தியாய் ஆண்டவன் எழும்போது, அவருக்கு முன் தான் ஒன்றுமில்லை என்ற உணர்வு எழுந்ததால், அதை ஒரு கேள்வியாக இங்கு தொடுக்கிறார் தாவீது:
திருப்பாடல் 144 3-4
ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்? மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை.

தாவீது இங்கு எழுப்பும் இக்கேள்விகள், திருப்பாடல் 8ல் அவர் எழுப்பிய கேள்விகளை நமக்கு நினைவுறுத்துகின்றன.
திருப்பாடல் 8 3-4
உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?
இறைவனின் அளவற்ற இயல்பை, வல்லமையை எண்ணுகையில், நமது சக்தியற்ற ஒன்றுமில்லாமை நமக்கு நினைவுறுத்தப்படுகிறது.

எல்லையற்ற இறைவனின் பிரசன்னத்தில் நமது உண்மை நிலையை உணர்வதும், அந்த உணர்வின் ஒரு வெளிப்பாடாக இறைவனுக்கு நன்றி பகர்வதும் இன்று நாம் திருப்பாடல் 144லிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்.
-------------------------
இப்பாடலின் ஒரு சில வரிகள் கவிதை வரிகளாய் உள்ளன. தாவீது பயன்படுத்தியுள்ள உருவகங்களும், எண்ணங்களும் நம் சிந்தனைகளுக்கு இதம் அளிக்கின்றன. முக்கியமாக, தாவீது தனக்கு அடுத்த சந்ததி எவ்விதம் வாழவேண்டும் என்று காணும் கற்பனை நம் மனதில் நம்பிக்கையூட்டுகிறது. இதே ஆசி மொழிகளை, செபங்களை நாமும் நமது இளைய தலைமுறைக்காக எழுப்புவோம். தாவீதின் இக்கவிதை வரிகளுடன் இன்றைய விவிலியத் தேடலை நாம் நிறைவு செய்வோம்:
திருப்பாடல் 144 9, 12-15
இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன். எம் புதல்வர்கள் இளமையில் செழித்து வளரும் செடிகள்போல் இருப்பார்களாக! எம் புதல்வியர் அரண்மனைக்கு அழகூட்டும் செதுக்கிய சிலைகள்போல் இருப்பார்களாக! எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக! வகைவகையான தானியங்களால் நிறைந்திருப்பனவாக! எங்கள் வயல்களில் ஆடுகள் ஆயிரம், பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்! எங்கள் மாடுகள் சுமைசுமப்பனவாக! எவ்விதச் சிதைவோ இழப்போ இல்லாதிருக்கட்டும்! எங்கள் தெருக்களில் அழுகுரல் இல்லாதிருக்கட்டும். இவற்றை உண்மையாகவே அடையும் மக்கள் பேறுபெற்றோர்! ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட மக்கள் பேறுபெற்றோர்.








All the contents on this site are copyrighted ©.