2012-11-20 15:13:19

மியான்மார் ஆயர்கள் : ஒபாமாவின் பயணம் மக்களாட்சிக்கு நம்பிக்கையூட்டுகின்றது


நவ.20,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா மியான்மாரில் மேற்கொண்ட சுற்றுப்பயணம், அந்நாட்டுக்கு நம்பிக்கையூட்டும் அடையாளத்தைக் கொண்டிருப்பதாக மியான்மார் ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் Charles Bo தெரிவித்தார்.
இத்திங்களன்று அரசுத்தலைவர் ஒபாமா மியான்மாருக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த யாங்கூன் பேராயர் Charles Bo, இந்த வரலாற்று சிறப்புமிக்கச் சுற்றுப்பயணம், மக்களாட்சி மற்றும் சமயச் சுதந்திரத்தை நோக்கிய சீர்திருத்தப் பாதையில் மியான்மார் தொடர்ந்து செல்வதற்கு ஊக்கமூட்டுவதாய் இருக்கின்றது என்று கூறினார்.
சமயச் சுதந்திரத்தைப் பொருத்தவரையில், இந்தப் பயணம், மியான்மார் ஆயர்களுக்கும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகவும் பேராயர் Bo தெரிவித்தார்.
அரசுத்தலைவர் ஒபாமாவின் இந்தப் பயணத்தையொட்டி மியான்மார் அரசு 518 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருக்கின்றது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஒருவர் மியான்மாருக்கு மேற்கொண்ட முதல் பயணமாக, ஒபாமாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.