2012-11-19 15:38:50

வாரம் ஓர் அலசல் – துணிவே துணை


RealAudioMP3 நவ.19,2012. ஜே.பி.வாஸ்வானி என்ற எழுத்தாளர் ஓர் இறைத்தூதரைச் சந்தித்தது பற்றி இவ்வாறு சொல்கிறார் –

“நான் சிறுவனாக இருந்தபோது இறைத்தூதர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம், நான் என்னுடன் எப்போதும் வைத்துக் கொள்ளும்படியான ஒரு போதனையை எனக்கு அளியுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். அவர், குரைக்கும் நாயாக இல்லாமல், கர்ஜிக்கும் சிங்கமாக இரு என்று சுருக்கமாகச் சொன்னார். அந்த இறைத்தூதர் சொன்னது எனக்குப் புரியவில்லை. அதனால் அவரிடம் அதற்கு விளக்கம் கேட்டேன். அதற்கு அந்த இறைத்தூதர், நீ ஓர் அம்பை சிங்கத்தின் முகத்துக்கு நேராக எய்தாலும், சிங்கம் அதைப் புறக்கணித்துவிட்டு உன்னைத் தன் இலக்கிலிருந்து விலக்கிக் கொள்ளாமல் தாக்கும் வன்மையுடையது. ஆனால் நாயோ, ஏதேனும் ஒரு பொருளை அதை நோக்கி வீசினால் நாய் அதன் பின்னாலே ஓடித் தன் இலக்கை மறந்து விடும் என்று விளக்கம் சொன்னார்”.

இவ்வாறு சொல்லும் ஜே.பி.வாஸ்வானி, வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமானால் இன்னல்களையும் தோல்விகளையும் எதிர்த்துப் போராடும் திறன் இருக்க வேண்டும் என்கிறார். கடவுள் நம்மை நோக்கிக் கஷ்டங்களைக் கொடுத்தால் அதை முறியடிக்கும் வழியையும் காட்டித் தீமையிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார். எனவே பிரச்சனைகள் துன்பங்கள் வந்தால் அதன்வழியே போகக் கூடாது. அச்சமயங்களில் சிங்கமாக கர்ஜிக்க வேண்டும். அன்று முறத்தால் புலியை விரட்டிய வீரத்தமிழ் மங்கையர் போன்று, இன்று சிங்கமாக கர்ஜித்து விருதுகளை வாங்கியிருக்கிறார்கள் இரண்டு வீரத்தமிழ் மங்கையர்.

தாய் இராஜலட்சுமியும், மகள் சிவரஞ்சனியும் துணிவு மற்றும் சாகச் செயலுக்கான இந்த 2012ம் ஆண்டின் 'கல்பனா சாவ்லா’ விருதை, தமிழக முதல்வரிடமிருந்து அண்மையில் பெற்றிருக்கிறார்கள். ஆண்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் இரவில் புகுந்து திருட முயற்சித்த திருடர்களைப் பிடித்த இவர்களின் துணிச்சலான செயலுக்குத்தான் விருது கிடைத்துள்ளது. பொதுவாகத் திருடர்கள் பெண்களை இலக்கு வைத்தே திருடுகிறார்கள். ஏனெனில் எதிர்ப்பு காட்டுகிற அளவுக்குப் பெண்களுக்குத் துணிச்சல் இல்லை என்ற நம்பிக்கைதான். ஆனால் இவ்விரு பெண்களும், வீட்டுத்திருடர்கள் மற்றும் வழிப்பறிக் கொள்ளையர்களின் இந்த நம்பிக்கைக்குச் சவால் விட்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம், பு.உடையூர் கிராமத்தில் அந்த வீட்டுக்காரர் தாமோதரன் மளிகைக்கடை வைத்திருக்கிறார். இந்த நிகழ்வு நடந்த அன்று அவர் சென்னைக்குப் போயிருந்தார். தாய் ராஜலட்சுமியும் இளைய மகள் சிவரஞ்சனியும் அன்றைக்குக் கடையை மூடிட்டு வீட்டின் முன்அறையில் படுத்திருந்தனர். அச்சமயம், முகமூடி போட்ட இண்டு பேர் வெளிக்கதவின் பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றனர். அவர்களில் ஒருவன் ராஜலட்சுமியின் தாலிச் சங்கிலியை வேகமாகப் பிடித்து இழுத்திருக்கிறான். இதைப் பார்த்த மகள் சிவரஞ்சனிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆயினும் ஒரு நொடியில் சுதாரித்துக் கொண்டு 'திருடன்... திருடன்.... என்று கத்தியிருக்கிறார். உடனே அக்கம் பக்கத்திலிருந்து யாரும் வந்துவிடக்கூடாதே என்ற பயத்தில் ஒரு திருடர் தப்பி ஓடப் பார்த்தான். ஆனால் அவன் வழுக்கி விழுந்ததில் அவனுடைய இரண்டு கால்களும் பெஞ்சில் மாட்டிக்கொண்டன. ஒரு துண்டை எடுத்து அவனுடைய கழுத்தைச் சுத்தி தாயும் மகளும் இறுகப் பிடித்துக் கொண்டார்களாம். அவர்களை அவன் ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயத்தில், பக்கத்தில் கிடந்த மண்வெட்டியை எடுத்து நடுக்கத்துடனேயே அவனை வெட்டியிருக்கிறார் மகள். மூன்றாவது முறை வெட்டும்போது, மண்வெட்டியின் காம்பு உடைஞ்சு மண்வெட்டி அவனுடைய கையில மாட்டிக் கொண்டது. இனி அவ்வளவுதான், நம்மைக் கொன்றுபோடுவான் என்ற பயம் வந்தது. ஆனால் அவனிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்ற பயமே பலம் தர, ஒரு கத்தியை எடுத்து அவன் நகர முடியாத அளவுக்கு வெட்டியிருக்கிறார் சிவரஞ்சனி. அவர்களுடைய ஆக்ரோஷத்தை பார்த்து இன்னொரு திருடன் தப்பி ஓடிவிட்டான். வெட்டுப்பட்டவனை ஊர்க்காரர்களின் உதவியுடன் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இன்னொரு திருடனும் பின்னர் பிடிபட்டுவிட்டான். இவ்விருவருடைய அசாத்தியத் துணிச்சலுக்கு 'கல்பனா சாவ்லா’ விருதுடன் ஐந்து இலட்சம் பரிசுத் தொகையையும், பத்து கிராம் எடை கொண்ட தங்கப் பதக்கத்தையும், பாராட்டுச் சான்றிதழையும் பெற்றிருக்கிறார்கள்.

தாய் ராஜலட்சுமி, மகள் சிவரஞ்சனி ஆகிய இந்த வீரத் திருமகள்களின் துணிச்சல் இன்று தமிழ்நாடு முழுவதும் போய்ச் சேர்ந்துள்ளது. இந்தத் துணிச்சல் இந்த இரண்டு பெண்களுக்கும் எங்கிருந்து வந்தது? அது அவர்களுக்குள்தான் இருந்தது. உள்ளுக்குளிருந்த துணிச்சலைப் பயன்படுத்த நேரம் வந்த போது பயன்படுத்தினர். அதற்கு விருதும் பெற்றனர். இறகில்லாத ஏவுகணை கிரகம் தாண்டிப் பறக்கிறது. இந்தியாகூட, நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைத் தொடரில், 5,000 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய அக்னி 5 என்ற ஏவுகணையை பரிசோதனைரீதியாக கடந்த செப்டம்பரில் ஏவியிருக்கிறது. துடுப்பில்லாத நிலவு, விண்மீன் புடைந்து நீந்துகிறது. வாயில்லாத வாவி கானம் பாடுகிறது. ஒரு சிறிய எறும்பு தன்னைவிட மிகப்பெரிய சுமையைச் சுமக்கிறது. அப்படியானால் மனிதரால் மட்டும் முடியாதா எதையும் சாதிக்க! சாதிக்கும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! மனது வைத்தால் முடியும். தீயணைப்புப் படைவீரர் பிரியா இரவிச்சந்திரனின் துணிச்சலான ஒரு செயல் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கடந்த ஜனவரியில் சென்னை, எழிலகத்தில் பொங்கல் சமயத்தில் நடந்த தீ விபத்து சாதாரண ஒரு விபத்தாக மட்டுமல்லாமல், பலருடைய நினைவைவிட்டு அகல முடியாத ஒரு சம்பவமாகவும் பதிவாகிப் போயிருக்கிறது. அதற்கு காரணம் அரசு ஊழியர் திருமதி பிரியா இரவிச்சந்திரன் காட்டிய வேகம்தான்! அரசு அலுவலகங்கள் நிறைந்து கிடக்கும் எழிலகத்தில், நள்ளிரவு நேரத்தில் தீ பற்றிக்கொண்ட செய்தி அறிந்து, அங்கே விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் தீயணைப்புத் துறையின் கோட்ட அதிகாரி பிரியா இரவிச்சந்திரன் கொழுந்துவிட்டெறிந்து கொண்டிருந்த தீயின் நடுவே இலாகவமாக புகுந்து அரசு கோப்புகளைக் காக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தக் கட்டடத்தின் மரத்தூண் மளமளவென்று எரிந்த நிலையில அப்படியே அவர்மேல் விழ சுத்தமாக அவருக்கு வழியே தெரியவில்லையாம். ஒரு வழியைக் கண்டுபிடித்து ஒரு மரக்கட்டை மேல் ஏறி நின்றபோதுதான் சக அதிகாரிகள் அவரைக் கண்டுபிடித்து தூக்கியிருக்கிறார்கள். கையிலும், முகத்திலும் தீக்காயங்கள். மறுநாள் பத்திரிகைகளில் உடலெங்கும் தீக்காயங்களுடன் அவருடைய புகைப்படத்தைப் பார்த்து தமிழகமே கலங்கியது. ஏறத்தாழ இரண்டு மாத தீவிரச் சிகிச்சை, ஐந்து மாத ஃபிஸியோதெரபி என்று மெள்ள இயல்பு நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார் பிரியா. 101ம் அனைத்துலக பெண்கள் தினம் கடந்த மார்ச் மாதத்தில் சிறப்பிக்கப்பட்டபோது ‘அசாதாரணப் பெண் 2012’ என்ற விருதை ஒரு பன்னாட்டு நிறுவனம் வழங்கி கவுரவித்தது. பிரியாவின் வீரதீர செயலைப் பாராட்டி குடியரசுத்தலைவர் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. ஆம். துணிச்சல் இன்றி வெற்றி இல்லை.

பெரிய பெரிய தொழிலதிபர்களிடம் அவர்களது வெற்றிக்கான சூத்திரம் என்னவென்று கேட்டால் ஏறத்தாழ எல்லாருமே துணிச்சல் தேவை என்றுதான் சொல்கிறார்கள். துணிந்தவருக்குத் துக்கமில்லை என்ற முதுமொழி உண்டு. ஷார்ப் என்ற பெயர் கொண்ட பம்ப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உலகில் வலிமையான முத்திரை பதித்திருக்கிறவர் கோவை ஷார்ப் பம்ப்ஸ் நிறுவனர் திரு.கே.கே. இராமசாமி. எளியதொரு கைத்தறி நெசவுக் குடும்பத்தில் பிறந்த இவர், இன்று பன்னாட்டு அளவில் செயல்படும் தொழில் நிறுவனமாய் இதனை வளர்த்திருப்பவர். தொழில் முனைவோர்க்கு இந்தந்தக் குணங்கள் தேவை என்று அவர் சொல்கிறார். கால நேரம் பார்க்காது உழைக்கும் தன்மை, விரைவாகவும் சரியாகவும் முடிவெடுக்கும் ஆற்றல், தொழில் குறித்த விழிப்புணர்வு, தொலைநோக்குப் பார்வை, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் துணிவு ஆகியன வேண்டும். பாரம்பரிய சிந்தனைப்போக்கிலிருந்து வெளிவரும் துணிச்சல் வேண்டும் என்கிறார் திரு.கே.கே. இராமசாமி.

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும்தான் ஒருவரை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும் மூன்று ஆயுதங்கள் என்று கன்ஃப்யூஷியஸ் சொல்கிறார். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க அறிவியலாளர் சுனிதா வில்லியம்ஸ் கடந்த செப்டம்பர் 17ம் தேதியிலிருந்து நாசா பன்னாட்டு விண்வெளி ஆய்வுக்கூடத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இந்த 2012ம் ஆண்டில் இவர் மேற்கொண்டுள்ள இந்த விண்வெளிப் பயணம் தவிர இதற்குமுன்னர் இந்த ஆய்வுக் கூடத்தில் 195 நாள்கள் செலவிட்டுள்ளார். 47 வயதான வில்லியம்ஸ் இவ்வளவு பெரிதாகச் சாதித்து வருவதற்கு அவரிடம் இருப்பது அசாதாரண துணிச்சல்தான். விண்வெளிக்குப் பயணம் செய்வதற்குப் பயந்து கொண்டிருந்தால் இந்த மாதிரி சாதித்துள்ள பெண்கள் பட்டியிலில் இரண்டாவது இடத்தை இவர் பிடித்திருக்கமாட்டார். எனவே உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்குத் துணிச்சலுடன் எப்போதும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்கிறார் டி.ப்ரௌன்.
அன்புள்ளங்களே, வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? அஞ்சா நெஞ்சம் வேண்டும். துணிவை எப்பொழுதும் துணையாகக் கொண்டிருக்க வேண்டும். சுபாஷ் சந்திரபோஸ் சொன்னது போல, இறுதி வெற்றிக்கு உரியவர்கள் கலங்காத உள்ளம் படைத்தவர்களே! ஒவ்வொருவரும் தனது வாழ்க்கைச் சக்கரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கொடுமையான துன்பம் தருகிற நிகழ்வை 'துணிவு' என்ற எண்ணெயைத் தனது சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும். அப்போதுதான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும். இவ்வளவு காலம் துணிச்சலின்றி வாழ்வை வீணாக்கிவிட்டேனே என்ற கவலை வேண்டாம். ஏனெனில் நேற்று என்பது நழுவிப் போன காலம். அதை எட்டிப் பிடிக்க முயற்சித்து கையைக் காயப்படுத்திக் கொள்ளக் கூடாது. அப்போது இன்று இருக்கும் வாய்ப்பும் கையைவிட்டு நழுவிப்போய்விடும். பின்னர் நாளைவரை மிஞ்சியிருப்பது வெறுங் கையாகத்தான் இருக்கும். எனவே நேற்று என்ற காலத்தைத் தேடிக் கொண்டிருக்காமல் இன்றைய நாளில் துணிச்சலுடன் முன்னோக்கிச் செல்வோம். வெற்றி நிச்சயம்.







All the contents on this site are copyrighted ©.