2012-11-19 16:09:25

பள்ளிகளில் சமயக்கல்வி ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்


நவ.19,2012. இளையோரின் முழு மனித வளர்ச்சி முக்கியம் என்பதால், பள்ளிகளில் சமயக்கல்வி ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் நடந்து முடிந்துள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் ஐந்து அம்சக் கொள்கை ஒன்று அனைத்து ஆயர்களாலும் உறுதிசெய்யப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சமயக் கல்வி, மனித வர்த்தகம், ஒரே பாலினத் திருமணம், மத்தியக் கிழக்கு பகுதியில் அமைதி நிலவ செபங்கள், மதிப்புடன் வாழ்வதை உறுதி செய்யும் ஊதியம் என்ற ஐந்து அம்சங்கள் கொண்ட இவ்வறிக்கையை ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஒரே பாலினத் திருமணம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றம் விவாதித்து வரும் வேளையில், ஆண், பெண் திருமணம் என்ற இயற்கை நியதிக்கு எதிராகச் செல்லும் எந்த முயற்சிக்கும் ஆயர்களின் எதிர்ப்பு உண்டு என்று இவ்வறிக்கை கூறுகிறது.
சிரியா, புனித பூமி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் மோதல்களை விரைவில் தீர்த்து, மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ அனைத்து மக்களும் செபத்தில் இணைய வேண்டும் என்று ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். வருகிற டிசம்பர் 4ம் தேதி, புனித John Damascene அவர்களின் திருநாளன்று இந்த செப முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.