2012-11-17 17:08:57

அகில உலக நலப்பணியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு


நவ.17,2012. துன்பம் என்ற சொல்லுக்கே ஒரு புதிய அர்த்தம் கொடுத்து, துன்பங்களை அன்பால் வென்ற கிறிஸ்து, துன்பங்களைத் துடைக்கும் திருஅவைப் பணிகளுக்கு ஆழமான அர்த்தம் தருகிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழன் முதல் சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெற்ற 27வது அகில உலக நலப்பணியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய வாழ்த்துரையில் இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலங்களில் உலகம் சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவினால், நலப்பணிகளுக்கு ஒதுக்கப்படும் தொகை அரசுகளால் குறைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இச்சூழலில் கத்தோலிக்க நலப்பணியாளர்கள் இன்னும் தீவிரமான அர்ப்பணத்துடன் உழைக்கவேண்டிய கட்டாயத்தையும் சுட்டிக்காட்டினார்.
தன் உரையின் இறுதியில், உலகெங்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் தான் அன்புடன் நினைவுகூர்வதாகக் கூறியத் திருத்தந்தை, நோயில் வாடுவோருக்கும், அவர்களுக்குப் பணிபுரிவோருக்கும் தன சிறப்பான அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.