2012-11-16 15:38:34

கொள்கைபிடிப்பற்ற இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம்: ஆங் சாங் சூச்சி


நவ.16,2012. இந்தியாவில் இருக்கும்போது, இந்திய குடிமக்களில் ஒருவராக, தான் உணர்வதாக மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பயணங்கள் மேற்கொண்டுள்ள மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூச்சி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இவ்வெள்ளியன்று காலை டில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சூச்சி பேசுகையில், “இந்த உலகில், இளைய தலைமுறையினரின் நம்பிக்கைகளும், உயிர்ப்புகளும் ஒன்றிணைந்துள்ளன. இளைய தலைமுறையினரின் வெளிப்படைத்தன்மை, அவர்களின் பெருந்தன்மை ஆகியவை அவர்களின் உள்ளங்களில் கசப்பு, கோபம் ஆகியவை இல்லை என்பதைக் காட்டுகிறது” என்று கூறினார்.
இளைய உள்ளங்கள் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கைகள் வீணாகி விடவில்லை எனக் கூறிய சூச்சி, அனுபவங்கள் கசப்பாக மாறுவதும், மகிழ்ச்சியாக மாறுவதும், அதை நாம் அணுகும் முறையில் தான் உள்ளது என்று கூறினார்.
கொள்கைகளை விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய இளையோர் அரசியலில் ஈடுபடவேண்டாம் என்று கூறிய சூச்சி, கொள்கையற்ற அரசியலே உலகில் நிலவும் பெரும் ஆபத்து என்பதையும் சுட்டிக் காட்டினார்.
“இந்தியாவிலிருந்து நான் வெகுதூரத்தில் இருப்பதாக நினைக்கவில்லை. நான் இந்தியாவிற்கு வந்ததில் இருந்து, நமது நட்பு மீதான எனது நம்பிக்கை நியாயமானது என்பதை உணர்கிறேன். இந்த நம்பிக்கை நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து குடியரசை நோக்கி நம்மை நடைபோடவைக்கும்” என்று மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூச்சி உணர்வு பொங்கப் பேசினார்.








All the contents on this site are copyrighted ©.