2012-11-16 15:37:47

இயற்கைப் பேரிடர்களில் ஆசிய நாடுகள் 25 மடங்கு அதிகம் துன்பங்களைச் சந்திக்கும் ஆபத்து


நவ.16,2012. இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது, ஆப்ரிக்க, ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் இடர்பாடுகளைக் காட்டிலும், ஆசிய நாடுகள் 25 மடங்கு அதிகம் துன்பங்களைச் சந்திக்கும் ஆபத்து உள்ளது என்று Asian Development Bank எனப்படும் ஆசிய முன்னேற்ற வங்கியின் அறிக்கையொன்று கூறியுள்ளது.
ஆசிய நாடுகளின் அரசுகளில் காணப்படும் தவறான திட்டவரைவுகள், பெருகிவரும் மக்கள் தொகை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகிய காரணங்களால் ஆசிய நாடுகள் பேரிடர்களால் அதிக அளவில் துன்புறுகின்றன என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வானிலை மாற்றங்களாலும், மழை பொய்த்து விடுவதாலும் கிராமங்களை விட்டு, நகரங்கள் நோக்கி வரும் மக்கள், கடலோரங்களில் தாழ்வானப் பகுதிகளில் வாழ்வதும் இப்பிரச்சனைகளைக் கூடுதலாக்கி உள்ளன என்று இவ்வறிக்கை கூறுகிறது.
இயற்கைப் பேரிடர்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1980களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, பத்தாண்டுகளில் 1,00,000 என்ற அளவு இருந்ததென்றும், 2000 முதல் 2009ம் ஆண்டுவரை எடுக்கப்பட்ட கணிப்பின்படி, இவ்வெண்ணிக்கை 6,51,000 ஆக உயர்ந்துள்ளது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.