2012-11-16 15:38:03

ஆப்ரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகள் பசியின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளன - FAO இயக்குனர்


நவ.16,2012. போர்கள், மோதல்கள், வறட்சி மற்றும் உணவுப் பொருட்களின் விலையுயர்வு ஆகியவை ஆப்ரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகள் பலவற்றைப் பசியின் கொடூரப் பிடியில் சிக்கவைத்துள்ளன என்று FAO இயக்குனர் José Graziano da Silva கூறினார்.
கட்டார் நாட்டின் தலைநகர் டோஹாவில் இப்புதன், வியாழன் ஆகிய இருநாட்கள் நடைபெற்ற ஓர் அகில உலகக் கருத்தரங்கில் உரையாற்றிய உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் இயக்குனர் da Silva, உலக அரசுகள் மனதுவைத்தால், பசியைப் போக்கமுடியும் என்றும் எடுத்துரைத்தார்.
1990களில் இருந்து ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 இலட்சமாக உயர்ந்து, தற்போது உலகில் 27 கோடியே 50 இலட்சம் மக்கள் பசியால் துன்புறுகின்றனர் என்று FAO இயக்குனர் கூறினார்.
60 நாடுகளிலிருந்து வந்திருந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கின் இறுதியில் பசியை நீக்கும் பல வழிகள் உறுதி மொழிகளாக வெளியிடப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.