2012-11-15 15:58:57

"மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப்பணியின் தளம்" - அகில உலக கருத்தரங்கில் கர்தினால் பெர்தோனே வழங்கிய மறையுரை


நவ.15,2012. இறையரசு கண்ணைக்கவரும் பிரம்மாண்டமான காட்சியாகத் தோன்றாமல், நிலத்தில் விதைத்த ஒரு சிறு விதைபோல் வளர்ந்து பயன்தரும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
நலம் மற்றும் மேய்ப்புப்பணி திருப்பீட அவை உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள 27வது அகில உலக கருத்தரங்கை இவ்வியாழனன்று துவக்கிவைத்து, திருப்பலியாற்றிய கர்தினால் பெர்தோனே, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியைக் குறித்து சிந்தித்துவரும் இந்த நம்பிக்கை ஆண்டில், நற்செய்திப் பணிக்கு மருத்துவமனைகள் சிறந்த தளங்கள் என்ற கருத்தில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கின் முயற்சிகளுக்குத் தன் வாழ்த்துக்களைக் கூறினார் கர்தினால் பெர்தோனே.
மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் பல ஆய்வுகளில் மனித உயிர்கள் பொருட்களைப் போல் பயன்படுத்தப்படுவதை விடுத்து, ஒவ்வொரு மனிதரும் மதிப்புடன் நடத்தப்படுவதற்கு மருத்துவ உலகம் தகுந்த வழிகளைத் தேடவேண்டும் என்றும் திருப்பீடச் செயலர் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
"மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப்பணியின் தளம்" என்ற தலைப்பில் சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் இக்கருத்தரங்கில் அறுபதுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து வந்திருக்கும் அங்கத்தினர்கள் கலந்துகொள்கின்றனர்.
இக்கருத்தரங்கின் உறுப்பினர்களை இறுதிநாளன்று திருத்தந்தை சந்தித்து உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.