2012-11-15 15:59:12

ஜெனீவா ஐ.நா.அவை கருத்தரங்கில் பேராயர் சில்வானோ தொமாசியின் உரை


நவ.15,2012. உலக வரலாற்றில் இதுவரை நடைபெற்ற அனைத்து போர்களிலும் மோதல்களிலும், பெரும்பான்மையாய் கொல்லப்பட்டிருப்பது சாதாரண மக்கள் என்றும், மக்களின் உடமைகளே அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ளன என்றும் வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாரம்பரியமாகப் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் ஜெனீவா ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தர பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
மதம், இனம், நாடு, மொழி என்ற பல்வேறு காரணங்களால் போர்கள் எழுந்தாலும், ஒவ்வொரு போரிலும் கொல்லப்படுவதும், உடமைகளை இழப்பதும் எளிய மக்களே என்று கூறிய பேராயர் தொமாசி, இந்நிலையைக் குறித்து நாடுகளும், அரசுகளும் ஆழமான கேள்விகளை எழுப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆயுத பயன்பாட்டின்போது, மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இவை பயன்படுத்தப்பட்டிருப்பதே அதிக எண்ணிக்கையில் மக்கள் இறப்பதற்கு காரணம் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர், மக்களைக் கொல்லும் எம்முறையும் நன்னெறிக்குப் புறம்பானது என்றார்.
சட்டங்களைக் கொண்டுமட்டும் நாம் இக்கொலைகளைத் தடுக்கமுடியாது என்று கூறிய பேராயர் தொமாசி, அமைதியைத் தேடும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதில் அனைத்து அரசுகளும் முழு முயற்சி எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.