2012-11-15 15:58:35

கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து திருத்தந்தை


நவ.15,2012. நற்செய்தி அறிவிப்புப்பணிக்கும் கிறிஸ்தவர்களிடையே காணப்படும் பிரிவினைகளை மேற்கொள்வதற்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவை சுட்டிக்காட்டி இவ்வியாழனன்று தன்னை திருப்பீடத்தில் சந்தித்த கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான திருப்பீட அவையின் அங்கத்தினர்களுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'புதிய நற்செய்தி அறிவிப்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம்' என்பது குறித்து இவ்வவை நடத்திய ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவங்கியதன் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் இத்தகையதொரு கூட்டம் இடம்பெறுவது பொருத்தமானதே என்றார்.
இன்றைய உலகில் நம் உடன் வாழ்வோரில் காணப்படும் ஆன்மீக வெறுமை நிலை, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் ஒரு சவாலாக உள்ளது என்ற திருத்தந்தை, இத்தகையச் சூழல்களில் நற்செய்தி அறிவிப்பிற்கான ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணம் அனைத்துக் கிறிஸ்தவசபைகளிலும், சமூகங்களிலும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கிறிஸ்துவில் தன்னை வெளிப்படுத்திய இறைவனில் விசுவாசம் கொண்டிருக்கும் அனைத்துக் கிறிஸ்தவசபைகளும் ஒன்றிணைந்து வருவதற்கான வாய்ப்புகள் அண்மையில் தெரியவில்லை எனினும், ஒன்றிப்பு முயற்சிகளின் அனுபவங்களும், ஆன்மீக வாழ்வும், இறையியல் கலந்துரையாடல்களும் ஆழமான ஒரு சாட்சிய வாழ்வுக்குத் தூண்டுபவைகளாக உள்ளன எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
பிரிந்துவாழும் கிறிஸ்தவர்களிடையே கண்ணால் காணக்கூடிய ஒன்றிப்பு என்பது மனிதர்களின் முயற்சிகளின் பலனாக மட்டும் கிட்டுவதில்லை ஏனெனில் அது இறைவனின் கொடை என்பதையும் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான திருப்பீட அவையின் அங்கத்தினர்களிடம் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்பு முயற்சிகளில் கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.








All the contents on this site are copyrighted ©.