2012-11-14 15:55:23

நவம்பர் 14 - உலக நீரழிவு நோய் நாள்


நவ.14,2012. உலகெங்கும் நீரிழிவு நோயால் இறப்பவர்களில் 80 விழுக்காட்டினர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் மட்டும், ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் சில ஆண்டுகளில் இவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதைக் குணப்படுத்தும் இன்சுலின் மருந்தை Charles Best என்பவருடன் இணைந்து கனடாவைச் சேர்ந்த மருத்துவர் Fredrick Banting கண்டுபிடித்தார்.
இவரைக் கௌரவப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நவம்பர் மாதம் 14ஆம் தேதியை உலக நீரிழிவு நோய் நாளாக ஐ.நா அறிவித்தது.
நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது முதல் வகை. இது குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இரண்டாவது வகை, இன்சுலின் போதிய அளவு சுரக்காமல் இருப்பது. இவ்வகைதான் 90 விழுக்காடு பேருக்கு உள்ளது. 45 வயதுக்கும் மேற்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உலகம் முழுவதும் 34 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030க்குள் இது இரு மடங்காக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
உடல் எடை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள்.
இந்நோய்க்கான சிகிச்சையை தொடக்கத்திலேயே எடுக்கத் தவறினால், கண், இருதயம், சிறுநீரகம், ஆகியவை பாதிக்கப்படும். உணவு முறை, உடற்பயிற்சியால் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.








All the contents on this site are copyrighted ©.