2012-11-14 15:32:30

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


நவ. 14, 2012. குளிர்காலம் துவங்கிவிட்டபோதிலும் கடந்த இரு நாட்களாக உரோம் நகரம் மிதமான வெப்பத்தையே அனுபவித்து வருவது, வழக்கத்திற்கு மாறான ஒரு வித்தியாசமான தட்பவெப்பநிலையாகவே உள்ளது. குளிர்காலங்களில் திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகங்கள் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெறும் என்பதால் இவ்வார மறைபோதகமும், வெளியே இதமான வெப்பம் இருந்தபோதிலும், ஏற்கனவே திட்டமிட்டபடி அரங்கிலேயே இடம்பெற்றது.
இறைவன்பேரில் நாம் கொள்ளும் அந்தரங்கமான பேரார்வம் மனித இதயத்தின் ஆழத்தில் காணக்கிடக்கிறது என்று, நம்பிக்கையின் ஆண்டு குறித்த நம் மறைபோதகத்தொடரில் கடந்த வாரம் நோக்கினோம் என மறைப்போதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை. கடவுளை அறிந்துகொள்ளவும், நம் மகிழ்வை கடவுளில் கண்டுகொள்ளவும் நாம் எடுக்கும் முயற்சிகளில் தன் அருளின் துணை தந்து, நம்மைத்தூண்டி, நமக்குத்துணையாக வருகிறார் இறைவன். இருப்பினும் இன்றைய மதச்சார்பற்ற உலகில் விசுவாசம் என்பது நியாயப்படுத்தமுடியாத ஒன்றாக பலருக்குத் தோன்றுகிறது. நடைமுறை கடவுள்மறுப்புக் கொள்கையை எதிர்நோக்கும் நாம், கடவுள் இல்லை என்பது போன்று எண்ணி அதுபோல் வாழ்வை நடத்தும் சோதனைக்கு உள்ளாகின்றோம். இறைவனால் படைக்கப்பட்டு அவருடன் ஒன்றித்து வாழ அழைக்கப்பட்டிருப்பதில் பொதிந்திருக்கும் உயரிய மாண்பைக் கொண்டிருக்கும் நம் வாழ்விலிருந்து கடவுள் அகற்றப்படும்போது நாம் குறைவுபடுகின்றோம். விசுவாசிகள் என்ற முறையில் நாம் நம் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் நம்பத்தகும் பகுத்தறிவுவாத காரணங்களை வழங்கவேண்டிய தேவை உள்ளது. இந்த காரணங்களை நாம், தன்னைப் படைத்த இறைவனைப்பற்றிப் பேசும் படைப்புகளின் அழகில் கண்டுகொள்ளலாம். மனிதனின் இதயத்தில் முடிவற்றதாய் நிலைத்திருக்கும் ஏக்கத்தின் நிறைவை இறைவனில் மட்டுமே நாம் கண்டுகொள்ளமுடியும். மேலும், இறைவனுடன் நாம் கொள்ளும் தினசரி ஒன்றிப்பின் வழி நம்மை ஒளியூட்டி உருமாற்றும் விசுவாசத்தின் வழியாகவும் நம் ஏக்கத்தின் நிறைவைக் கண்டுகொள்ளமுடியும். கிறிஸ்துவில் தன்னை வெளிப்படுத்திய இறைவனை அறிந்து அன்புகூர ஏனையவர்களையும் வழிநடத்திச்செல்ல உதவும் விதமாக உயிருள்ள விசுவாசத்தின் சாட்சிகளாக நாம் விளங்குவோமாக.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்








All the contents on this site are copyrighted ©.