2012-11-14 15:52:57

27வது அனைத்துலகக் கருத்தரங்கு - "மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப் பணியின் தளம்"


நவ.14,2012. இறைவார்த்தையை அறிவிப்பதும், உடல்நலம் குன்றியோரைக் குணமாக்குவதும் திருஅவையின் இரு முக்கியப் பணிகள் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 15, இவ்வியாழன் முதல் சனிக்கிழமை முடிய நலம் மற்றும் மேய்ப்புப்பணி திருப்பீட அவை உரோம் நகரில் நடத்தவிருக்கும் 27வது அனைத்துலகக் கருத்தரங்கைக் குறித்து இத்திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்று கூறிய இயேசு, அத்துடன், உடல் நலம் குன்றியோரைக் குணமாக்குங்கள் என்ற கட்டளையையும் அளித்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Zimowski, "மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப் பணியின் தளம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு அமையும் என்று அறிவித்தார்.
மேற்கத்திய நாடுகளில் மருத்துவப்பணி அதிகமான அளவு தொழில் மயமாக்கப்பட்டுள்ளது என்பதையும், மருத்துவச் செலவுகள் கூடிவருகிறது என்பதையும் எடுத்துரைத்த பேராயர் Zimowski, இத்தகையப் போக்குகள் சீரமைக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.
60க்கும் மேற்பட்ட நாடுகளின் நலப்பணியாளர்கள் கலந்துகொள்ளும் 27வது அனைத்துலகக் கருத்தரங்கு, இவ்வியாழனன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் ஆரம்பமாகும் என்றும், இச்சனிக்கிழமையன்று கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அனைவரையும் திருத்தந்தை சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.