2012-11-12 17:24:04

பாகிஸ்தானில் அருள்சகோதரிகள் நடத்திவரும் பள்ளியில் இஸ்லாமியப் பெண்களே முற்றிலும் பயில்கின்றனர்


நவ.12,2012. பாகிஸ்தானில் தாங்கள் நடத்திவரும் பள்ளியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்களே முற்றிலும் பயில்கின்றனர் என்று பாகிஸ்தானின் Swat பள்ளத்தாக்கில் பணிபுரியும் அருள்சகோதரி ஒருவர் கூறினார்.
பெண்களின் கல்விக்காகப் போராடியதால் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, தற்போது இங்கிலாந்தில் சிகிச்சை பெற்றுவரும் பாகிஸ்தான் சிறுமி Malala Yousafzaiக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக, நவம்பர் 10ம் தேதி, கடந்த சனிக்கிழமையை ஐ.நா. போதுச்செயலர் பான் கி மூன் அறிவித்துள்ளதையொட்டி, Fides செய்திக்குப் பேட்டியளித்த அருள்சகோதரி Riffat Sadiq, இவ்வாறு கூறினார்.
பெண்கள் கல்விக்கு எதிராக தலிபான் அடிப்படைவாதக் குழுக்கள் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட வைத்துள்ளனர், மற்றும் 150 பள்ளிகளை இடித்துள்ளனர்.
காணிக்கை மாதா துறவுச்சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகள் Swat பள்ளத்தாக்கில் 1962ம் ஆண்டு முதல் நடத்திவந்த பள்ளியை, 2007ம் ஆண்டு தாலிபான் வற்புறுத்தலால் மூடவேண்டியிருந்தது. 2009ம் ஆண்டு இப்பள்ளி தாலிபான் கும்பலால் இடிக்கப்பட்டது.
இவ்வாண்டு மீண்டும் இப்பள்ளியைச் சீரமைத்து, வகுப்புக்களைத் துவங்கியுள்ள அருள்சகோதரிகள், இதுவரை தங்கள் பள்ளியில் 200க்கும் அதிகமான பெண்கள் சேர்ந்துள்ளனர் என்றும், உள்ளூர் மக்கள் தங்கள் கல்விப் பணியால் பெரிதும் மகிழ்வடைந்துள்ளனர் என்றும் Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.