2012-11-12 17:06:00

இவ்வுலகைக் காப்பாற்ற முதியோரின் செபங்கள் உதவமுடியும் என்றார் திருத்தந்தை


நவ.12,2012. ஒவ்வொரு வயதிலும் இறைவன் மக்களுக்கு தன் கொடைகளை வழங்குகிறார் என்பதை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு முதியோரும் தன் கவலை எனும் சிறைக்குள் தன்னை முடக்கிக்கொள்ளாமல் வாழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடக் கற்றுக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரில் சான் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு குழு நடத்தும் முதியோர் இல்லத்திற்கு இத்திங்கள் சென்று அவர்களோடு உரையாடிய திருத்தந்தை, தானும் முதியோர் என்ற முறையில் அவர்களின் துன்பங்களையும் பிரச்சனைகளையும் தெரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
விவிலியத்தில் முதுமை என்ப்து இறைவனின் ஆசீராக குறிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இலாபக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் இன்றைய உலகில் முதியோர்கள் பலனற்றவர்களாக ஒதுக்கப்படுவது குறித்தக் கவலையையும் வெளியிட்டார்.
முதியோர் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்தே எந்த ஒரு கலாச்சாரமும் கணிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துரைத்து, முதியோரை வரவேற்பவர்கள் வாழ்வையே வரவேற்கிறார்கள் என மேலும் இயம்பினார் திருத்தந்தை.
முதியோர்கள் தங்களிடம் கொண்டிருக்கும் முக்கிய செலவங்களுள் ஒன்று செபம் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, இறைவனிடம் பரிந்துரைப்பவர்களாகச் செயல்பட்டு இவ்வுலகைக் காப்பாற்ற முதியோர்கள் உதவமுடியும் என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.