2012-11-10 16:39:50

நவம்பர் 11, பொதுக்காலம் - 32ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இரு பெண்களை மையப்படுத்தி இவ்வார ஞாயிறு வாசகங்கள் அமைந்துள்ளன. இவ்விருவரும் கைம்பெண்கள். கைம்பெண், விதவை என்ற வார்த்தைகளைக் கேட்டதும், நம் மனங்களில் தோன்றும் முதல் வார்த்தைகள்... உணர்வுகள்... "ஐயோ பாவம்". இந்தப் பாவப்பட்ட, பரிதாபத்திற்குரிய பெண்கள் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இன்னும் அதிக பரிதாபத்திற்குரிய நிலையில் வாழ்ந்தனர். சமுதாயத்தில் எத்தகுதியும் இல்லாமல் வாழ்ந்த இவர்கள் இறைவனின் கண்களில், இயேசுவின் கண்களில் உயர்ந்தோராய் கருதப்படுகின்றனர்.
அரசர்கள் முதல் நூல் 17ம் பிரிவிலும், மாற்கு நற்செய்தி 12ம் பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள இரு கைம்பெண்களை நாம் சந்திக்க முயல்வோம். அவர்கள் சொல்லித் தரும் வாழ்வுப் பாடங்களைப் பயில முயல்வோம். அரசர்கள் நூலில் இறைவாக்கினர் எலியா சந்தித்த கைம்பெண்ணும், அவரது மகனும் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் போராடும் பல கோடி ஏழைகளின் பிரதிநிதிகள். எலியா சந்தித்த இந்தக் கைம்பெண் ஏற்கனவே தனக்கும், தன் மகனுக்கும் மரணதண்டனை விதித்துவிட்டப் பெண். இறப்பதற்குமுன், தன் மகனுக்குச் சிறிதளவாகிலும் உணவுதந்து, அவன் மகிழ்ந்திருப்பதைக் காணவேண்டும் என்ற ஆவலால் அந்தத் தாய் ரொட்டி சுடுவதற்கு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் அவர் மனதில் ஓடிய எண்ணங்கள் இப்படி இருந்திருக்குமோ என்று எண்ணிப் பார்க்கிறேன்: "கடவுளே, இன்னைக்கி செய்ற அப்பங்கள் ரெண்டு பேருக்கும் போதாதுன்னு தெரியும். பாவம் என் பையன். அவன் வயிறாரச் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு? எனக்கு ஒன்னும் கிடைக்கதேன்னு நினச்சு, அவனும் சரியா சாப்பிடாம பட்டினி கிடக்கிறான். இன்னக்கி ஏதாவது பொய்யைச் சொல்லி அவனைச் சாப்பிட வெச்சிட்டு அப்புறம் ஏதாவது மிச்சம் இருந்தா, நான் சாப்பிட்டுகிறேன். என்பையனை இன்னக்கி நல்லா சாப்பிட வைக்கணும்... அதுக்கு ஏதாவது வழியக் காட்டு சாமி..." இப்படிக் கடவுளோடு பேசிக்கொண்டே சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அந்த கைம்பெண்ணின் வாழ்க்கையில் கடவுள் குறுக்கிடுகிறார்.

எலியா என்ற இறைவாக்கினர் வழியாகக் கடவுள் வருகிறார். சும்மா வரவில்லை. ஒரு பிரச்சனையைக் கொண்டுவருகிறார். அந்தப் பெண்ணின் உணவில் பங்குகேட்டு வருகிறார். கொடூரமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவரது வயிற்றில் அடிக்க வருகிறார். முதலில் எதேச்சையாகத் தண்ணீர் மட்டும் கேட்கும் எலியா, அந்தப் பெண் போகும்போது, 'கொஞ்சம் அப்பமும் கொண்டு வா' என்கிறார். ஏதோ அந்தப் பெண் வீட்டில் அப்பங்களைச் சுட்டு அடுக்கி வைத்திருப்பது போலவும், அவைகளில் ஒன்றிரண்டைக் கொண்டு வா என்பது போலவும் உள்ளது எலியாவின் கூற்று. மேலோட்டமாகப் பார்த்தால், எலியா அவரைக் கேலி செய்வது போலத் தோன்றலாம். ஆனால் அது கேலி அல்ல, ஒரு மறைமுக அழைப்பு. கடவுள் ஆற்றக்கூடிய புதுமைகளைக் காண்பதற்கு ஓர் அழைப்பு. அந்த அழைப்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை அந்தப் பெண்ணுக்கு. தன் பசி, அதைவிட தன் மகனின் பசி இவையே அவரது மனதை ஆக்ரமித்ததால், தன் இயலாமையை, விரக்தியை இவ்வார்த்தைகளில் கொட்டுகிறார்:
அரசர்கள் முதல் நூல் 17: 12
வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை: பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும். விரக்தியின் உச்சத்தில், தனக்குத் தானே எழுதிக்கொண்ட மரணதண்டனை தீர்ப்பு இது. நம்மைச் சுற்றியிருக்கும் பல கோடி ஏழைகள் தங்கள் வாழ்வில் பலமுறை தங்களுக்குத் தாங்களே வழங்கிக்கொள்ளும் மரணதண்டனைகளை இந்த வார்த்தைகள் நமக்கு நினைவுறுத்துகின்றன. விரக்தியில் எழுந்த இவ்வார்த்தைகளுக்குப் பதிலாக, எலியா அவரிடம் இறைவன் ஆற்றக்கூடிய அற்புதங்களைச் சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கு அவர் சொன்னதெல்லாம் விளங்கியதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், "அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார்" என்று இன்றைய வாசகம் கூறுகிறது.

அந்தப் பெண் எலியாவை முன்பின் பார்த்தது கிடையாது இருந்தாலும் அவர் சொன்னதுபோல் செய்கிறார். இதனை இருவேறு வகையில் நாம் பொருள் கொள்ளலாம். எலியா சொன்னதுபோல், புதுமை நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு அந்த ஏழை கைம்பெண் அப்படி செய்திருக்கலாம். ஆனால், அதைவிட மேலான ஒரு பொருளை நான் எண்ணிப்பார்க்கிறேன். தனது இயலாமையிலும், வறுமையிலும் பசியிலும் இன்னொரு மனிதரின் பசியைப் போக்கவேண்டும் என்ற ஆவலால், அவர் இப்படிச் செய்திருக்கலாம். அந்தப் பெண்ணின் மனதில் ஓடிய எண்ணங்களை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். "இன்னைக்கி என் மகனும், நானும் சாப்பிட்டா, இன்னும் ரெண்டு நாள் உயிரோட இருப்போம். அதுக்கப்புறம் சாகத்தான் வேண்டும். சாகுறதுக்கு முன்னால இன்னொரு மனுஷனுடைய பசியை தீர்த்துட்டு சாகலாமே... பாவம், அந்த மனுஷன்."
ஏழைகளின் மனம் அப்படிப்பட்டது. அவர்களுக்குத்தான் தாழ்வதென்றால், தவிப்பதென்றால், பசிப்பதேன்றால் என்னவென்று அனுபவப்பூர்வமாகத் தெரியும். அவர்களுக்குத்தான் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து, பசியைப் போக்கும் புதுமை தெரியும். தங்கள் துன்பகளைவிட, மற்றவர்களின் தேவைகள், துன்பங்கள் இவற்றைத் துடைப்பதையே பெரிதாக எண்ணும் மனம் அவர்களது.

"வெளிச்சம் வெளியே இல்லை" என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா எழுதியுள்ள ஒரு கவிதை என் நினைவுக்கு வருகிறது.

சாலையைக்
கடந்து செல்வதற்காகக்
காத்திருந்தார்கள்.
சிக்னல் கண்ணசைத்ததும்
பரபரப்போடு பறந்தார்கள்.

பார்வையில்லாத
வயோதிகர் ஒருவர்
சாலையின் குறுக்கே
தன்னுடைய
ஊன்று கோலையே
கண்களாக்கி
ஊர்ந்து கொண்டிருந்தார்...

அருகிலிருந்தோர்
அவசரமாய்ப் பறக்க...
பார்வையில்லாத அவர்
பாதியில் திகைக்க...
மாறப் போகிறேன் என்றது சிக்னல்;
பாயப் போகிறேன் என்றது பஸ்.

சட்டென்று
வேகமாய் வந்த
இளம் பெண்ணொருத்தி
அவரைக்
கையில் பிடித்து இழுத்தபடி
விரைந்து சாலையைக் கடந்தாள்.
உதவியாய் அவருடன் நடந்தாள்.

தெருவோரம் சென்றவள்
திரும்பியபோதுதான் தெரிந்தது
அவளுக்கு உள்ளதே
அந்த ஒரு கைதான் என்று.

நற்செய்தியில் கூறப்படும் கைம்பெண்ணை இப்போது சந்திப்போம். இயேசு அந்தப் பெண்ணைப்பற்றி கூறும் வார்த்தைகள் ஆழமானவை:
மாற்கு நற்செய்தி 12: 43-44
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்

ஒப்புமைப்படுத்திப் பேசுவது பொதுவாக இயேசுவின் பாணி அல்ல. ஆனால், இந்த நிகழ்வில் அப்பெண்ணின் காணிக்கையை மற்ற செல்வந்தர்களின் காணிக்கையோடு ஒப்பிட்டுப் புகழ்கிறார் இயேசு. மேலோட்டமாகப் பார்த்தால்... அதாவது, காணிக்கை பெட்டிக்குள் எவ்வளவு பணம் போடப்பட்டது என்ற மேலோட்டமான ஒரு கணக்குப் பார்வையுடன் பேசினால்... இயேசு சொல்வது மிகைப்படுத்தி சொல்லப்பட்டதுபோல் தெரியும். செல்வந்தர்கள் போட்டது ஒருவேளை 1000 ரூபாய் என்றால், இந்த ஏழை போட்டது... 50 காசுகள்.
ஆனால், அது கணக்கல்ல. எவ்வளவு போட்டார்கள் என்பதைவிட, காணிக்கை செலுத்தியபின் அவர்களிடம் என்ன மீதி இருந்தது என்பதுதான் காணிக்கையின் மதிப்பைக் காட்டும். இதைத் தான், அன்னை தெரசா மற்றொரு வகையில் சொன்னார்: “Give till it hurts” "கொடுங்கள், உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் கொடுங்கள்... கொடுங்கள், உங்கள் உடலை வருத்திக் கொடுங்கள்." என்று.
தமிழ் பாரம்பரியத்தில் பேசப்படும் சிபி சக்ரவர்த்தி என் நினைவுக்கு வருகிறார். தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற, தன் உடலின் சதையை அறுத்துத் தந்த அந்த மன்னர் அன்னை தெரசா சொன்னதுபோல் செய்தவர். கர்ணனும் இப்படி கொடுத்ததாக நமது மகாபாரதம் சொல்கிறது. தான் ஏமாற்றப்படுவது தெரிந்தும், தன் உயிர் போகும் அளவு தந்த கர்ணனும் உடல் வருத்தித் தந்தவர். இதைதான் இயேசுவும் கூறுகிறார். இந்த ஏழைக் கைம்பெண்... தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்

அப்பெண்ணின் காணிக்கையைப் பற்றி இயேசு புகழ்ந்து சொன்ன வார்த்தைகளில் ஆழமும், அர்த்தமும் உள்ளன. இருந்ததைப் போட்டார், வைத்திருந்ததைப் போட்டார் என்று மட்டும் சொல்லாமல், இருந்த அனைத்தையுமே போட்டார், பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டார் என்று அக்காணிக்கையின் முழுமையை அழுத்தமாய், ஆணித்தரமாய் கூறுகிறார் இயேசு.
அதுமட்டுமல்ல... இருந்தது, பிழைப்புக்காக வைத்திருந்தது என்ற வார்த்தைகளில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் கலந்து ஒலிப்பதையும் காணலாம். சுருங்கச் சொல்லவேண்டுமானால், இந்தக் கைம்பெண் தன்னையும், தன் வாழ்வையும் பற்றி சிறிதும் கணக்கு பார்க்காமல், கடவுள் என்ற எண்ணத்தில் முற்றிலும் தன்னை இழந்தார் என்று இயேசு நமக்குப் புரியவைக்கிறார்.
இந்தக் கைம்பெண் ஏன் இவ்விதம் செய்தார் என்ற கேள்வி எழலாம்... கடவுள் தன் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று இப்படி செய்தாரா? நிச்சயமாக கிடையாது. அந்தக் கண்ணோட்டம் வியாபாரம். ‘கடவுளே நான் இவ்வளவு தருகிறேன் நீ இவ்வளவு தா’ என்ற பேரம்... இயேசு புகழ்ந்த கைம்பெண் வியாபார பேரங்களைக் கடந்தவர். தன்னிடம் இருந்தவை எல்லாவற்றையும் கடவுளுக்கு மகிழ்வாகத் தந்தவர். எனவேதான் இயேசுவின் இந்த மனமார்ந்த பாராட்டுகளைப் பெறுகிறார். அந்தப் பெண் இந்தப் புகழுரையைக் கேட்டாரா? இல்லை. காணிக்கை செலுத்திய திருப்தியுடன் காணாமல் போய்விட்டார். அந்தப் பெண்ணுக்கு பெயர் கூட இல்லை. கட்டடங்களிலும், கற்களிலும், போஸ்டர்களிலும் பெயர்களைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யாமல், அமைதியாக நல்லது செய்வது ஏழைகளின் அழகு.

பல ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் வெள்ளம் வந்தபோது நடந்த ஒரு நிகழ்வு என் நினைவில் நிழலாடுகிறது. நான் பயின்ற அந்தக் கல்லூரியில் துப்புரவுத் தொழில் செய்தவரின் வீடு வெள்ளத்தால் நிறைந்துவிட்டது. அந்த வெள்ளத்தில் அவர் அனைத்தையும் இழந்தார். வீட்டில் இருந்தவர்கள் மட்டும் உயிர் தப்பினர். அவர் வளர்த்து வந்த ஓர் ஆட்டுக்குட்டியை அவரால் காப்பற்ற முடிந்தது. அது அவருக்கு பெரும் மகிழ்ச்சி. காரணம் என்ன? அந்த ஆட்டுக்குட்டியை அவர் கடவுளுக்கு நேர்ந்து விட்டிருந்தார். வெள்ளம் வடிந்ததும், நேர்ந்துவிட்டபடி அந்தக் குட்டியை ஒரு கோவிலுக்குக் கொடுத்தார். தனக்குரியதெல்லாம் இழந்தாலும், கடவுளுக்குரியதை கடவுளுக்கு செலுத்திய திருப்தியுடன் அந்த மகிழ்வை அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டது இப்போது எனக்கு நினைவில் இனிக்கிறது.

கடவுளுக்கும், பிறருக்கும் தரும்போது எதையும் எதிபார்க்காமல், நம் உடலை, வாழ்வை வருத்தித் தரவேண்டும். அதுவே மேலான காணிக்கை. இதை இன்றைய ஞாயிறு வாசகங்கள் வழியேச் சொல்லித்தந்த இரு கைம்பெண்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.








All the contents on this site are copyrighted ©.