2012-11-10 16:39:55

திருப்பீட இலத்தீன்மொழி கல்விக்கழகம் துவக்கப்பட்டுள்ளது


நவ.10,2012. திருஅவைக்குள் இலத்தீன் மொழியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் திருப்பீட கலாச்சார அவையின் கீழ், திருப்பீட இலத்தீன்மொழி கல்விக்கழகம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்து Motu Proprio என்ற புது ஒழுங்குமுறையை இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கத்தோலிக்கத் திருஅவையாலும் திருத்தந்தையர்களாலும் இலத்தீன் மொழி எப்போதும் உயர்வாகவே மதிக்கப்பட்டு வந்துள்ளது எனக்கூறும் திருத்தந்தை, இறையியல், திருவழிபாடு மற்றும் பொதுஅறிவு பயிற்சியில், மொழிகளின் பாதுகாவலராகவும், ஊக்கமளிப்பவராகவும் காலம் காலமாக செயல்பட்டு வந்த திருஅவையின் வரலாற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் அதிக ஆர்வம் காட்டிவரும் இன்றைய நவீன உலகில், கலாச்சாரத்திலும், இலத்தீன் மொழியிலும் புதுப்பிக்கப்பட்ட ஓர் ஆர்வம் பெருகிவருவதைக் காணமுடிகிறது என தன் Motu Proprio அறிவிப்பில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
கலாச்சார உலகிலும் திருஅவைக்குள்ளும் இலத்தீன் மொழியை மேலும் பொறுப்புடன் பயன்படுத்தவும், புரிந்துகொள்ளவும், தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இலத்தீன் கலாச்சாரப் பாரம்பரியத்தின் பயன்பாட்டை பெறும் நோக்கில் கல்விநிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களிடையே நெருங்கிய தொடர்பை வலியுறுத்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.