2012-11-09 15:47:45

அகில உலக Interpol பொதுஅவை உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை


நவ.09,2012. கடந்த பல ஆண்டுகளாக, இராணுவப் படையெடுப்பு, இராணுவங்களின் எல்லைமீறியச் செயல்கள் மூலம் மட்டுமே வன்முறைகளைச் சந்தித்து வந்த நாம், இன்று வன்முறையின் பல வடிவங்களைக் காணமுடிகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நவம்பர் 5, இத்திங்கள் முதல் வியாழன் முடிய உரோம் நகரில் நடைபெற்ற 81வது அகில உலக Interpol பொது அவையில், 190 நாடுகளிலிருந்து வந்திருந்த 1000க்கும் அதிகமான உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானியம் மற்றும் அரேபியம் ஆகிய மொழிகளில் அவர்களிடம் உரையாற்றினார்.
நீதியையும், சட்டத்தையும் நிலைநிறுத்த பணியாற்றும் அரசியல் தலைவர்களும், நீதித்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து கடந்த நான்கு நாட்கள் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டுவதாகத் திருத்தந்தை கூறினார்.
இன்றைய காலக்கட்டத்தில் வன்முறை பல்வேறு வடிவங்களை ஏற்றிருப்பதாகவும், அவற்றில் மிகவும் கவலை தரும் போக்குகள் தீவிரவாதம் மற்றும் தொழில் நிறுவனங்களைப் போல் செயலாற்றும் குற்றங்களும் என்று திருத்தந்தை தன் கவலையை வெளியிட்டார்.
சட்டங்களுக்குப் புறம்பாக, மறைமுகமாக நடைபெறும் மனித வர்த்தகம் குறித்தும், போதைப் பொருட்கள், ஆயுதங்கள், கள்ளப்பணம், தரக்குறைவான, போலியான மருந்துகள் என்று பல துறைகளில் நாடுவிட்டு நாடு மேற்கொள்ளப்படும் வர்த்தகங்கள் குறித்தும் திருத்தந்தை தன் உரையில் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.
வன்முறைகளையும் சட்டச் சீர்குலைவையும் சரிசெய்ய அரசியல் மற்றும் சட்ட நிறுவனங்கள் மட்டும் செயலாற்றினால் போதாது, மாறாக, மக்கள் சமுதாயம் முழுமையும் இந்தச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடவேண்டும் என்று திருத்தந்தை சிறப்பான அழைப்பை கூடியிருந்த Interpol பிரதிநிதிகளுக்கு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.