2012-11-09 15:49:52

2015ஆம் ஆண்டோடு இந்தியாவுக்கு நிதி உதவி நிறுத்தப்படும்: பிரிட்டன்


நவ.09,2012. இந்தியாவுக்கு நிதி உதவி அளிப்பதை வரும் 2015ஆம் ஆண்டோடு முற்றிலும் நிறுத்தப்போவதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. வரும் 2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு வழங்கப்படும் உதவி படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவுக்கு 319 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானிய அரசு வழங்குகிறது. இது 200 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு 2015இல் குறைக்கப்படும் என சர்வதேச வளர்ச்சி அமைச்சர் ஜஸ்டின் கிரினிங் (Justine Greening) கூறியுள்ளார்.
உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவுக்கு, உதவி வழங்கப்படக் கூடாது என்று பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கை வலுத்து வருகிறது.
அணு ஆயுதங்களை வைத்திருக்கின்ற, சந்திரனுக்கு ராக்கெட் விடுகின்ற ஒரு நாட்டுக்கு நிதி உதவு கொடுப்பது தேவையற்றது என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள வறியவர்களை விட இந்தியாவில் உள்ள 9 பின்தங்கிய மாநிலங்களில் அதிகமான வறியவர்கள் உள்ளனர் எனவே பிரிட்டனின் உதவி அவர்களுக்கு மிகவும் அவசியமானது என்று இத்திட்டத்தை ஆதரிப்போர் வாதிட்டனர்.
இவ்வாண்டின் துவக்கத்தில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கிரினிங், இந்தியா பல்வேறு துறைகளில் வெகுவாக முன்னேறியிருப்பதாகவும், இந்தியாவுக்கு நிதி உதவி என்ற நிலை மாறி, தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே ஒப்புதலளிக்கப்பட்ட திட்டங்களுக்கு உதவி கொடுக்கப்படும் என்றும், ஆனால் புதிய திட்டங்களுக்கு நிதி அளிக்கப்படாது என்றும் பிரித்தானிய அரசு கூறியுள்ளது.
பிரித்தானிய அரசின் உதவி இந்திய நடுவண் அரசுக்கு கொடுக்கப்படுவது கிடையாது. தன்னார்வ நிறுவனங்களுக்கும், மாநில அரசுகளின் சில திட்டங்களுக்குமே அது வழங்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.