2012-11-08 15:58:13

Guatemalaவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தையின் தந்தி


நவ.08,2012. நவம்பர் 7 இப்புதனன்று காலை 10.30 மணியளவில் Guatemala நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை தன் ஆழ்ந்த வருத்தத்தையும், செபங்களையும் தெரிவித்து, தந்திச் செய்தியொன்றை அந்நாட்டின் ஆயர் பேரவைத் தலைவரான ஆயர் Rodolfo Valenzuela Núñez அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இப்புதன் காலையில் 7.4 ரிக்டர் அளவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் Champerico என்ற நகர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை இவ்வியாழன் காலை வரை 48 என்று சொல்லப்படுகிறது. மேலும், 73,000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
இத்தகையப் பேரிடர்கள் நம்மை மனித நேயத்திலும், பிறரன்புப் பணிகளிலும் ஒன்றிணைக்கும் வாய்ப்பு என்று கூறியத் திருத்தந்தை, இப்பேரிடர் நேரத்தில் அயராமல் உழைக்கும் அனைத்து நல்மனதோரையும் தான் அசீர்வதிப்பதாகக் கூறினார்.
உற்றார், உடைமைகள் ஆகியவற்றை இழந்து தவிக்கும் அனைவருக்கும் தன் செபங்களையும், அனுதாபங்களையும் திருத்தந்தை தன் தந்திச் செய்தியில் வெளிப்படுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.