2012-11-07 16:13:42

திருத்தந்தையின் பிரதிநிதியாக பங்களாதேஷில் கர்தினால் Murphy-O’Connor


நவ.07,2012. நாம் பெற்றுக்கொண்ட விசுவாச பாரம்பரியத்தை வருங்கால மக்களுக்கு அளிக்கும் சிறந்த கருவிகள் குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் என்று கர்தினால் Cormac Murphy-O’Connor கூறினார்.
தெற்கு ஆசியாவில் கிறிஸ்தவ மறை விதைக்கப்பட்டதன் 400வது ஆண்டு நிறைவையும், டாக்கா உயர்மறைமாவட்டம் நிறுவப்பட்டதன் 125வது ஆண்டு நிறைவையும் பங்களாதேஷ் தலத்திருஅவை கொண்டாடிவருகிறது.
இவ்விழாக்களில் கலந்துகொள்ள, திருத்தந்தையின் பிரதிநிதியாக அந்நாட்டுக்குச் சென்றுள்ள கர்தினால் Murphy-O’Connor, டாக்கா உயர்மறைமாவட்டக் குருமாணவர்களை இச்செவ்வாயன்று சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
மேலும், இச்செவ்வாயன்று பங்களாதேஷ் ஆயர்களைச் சந்தித்தபோது, புதிய நற்செய்திப் பணி, நம்பிக்கை ஆண்டு ஆகிய எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
பங்களாதேஷ் இருபால் துறவியர் பேரவையையும், இஸ்லாமிய உயர்மட்டத் தலைவர்களையும் இப்புதனன்று சந்திக்கும் கர்தினால் Murphy-O’Connor, இவ்வெள்ளியன்று டாக்கா உயர்மறைமாவட்டத்தின் 125வது ஆண்டு நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றுவதுடன், நம்பிக்கை ஆண்டு நிகழ்வுகளைத் துவக்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.