2012-11-07 16:14:09

உரோம் நகரில் நடைபெற்றுவரும் INTERPOL கருத்தரங்கில் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி


நவ.07,2012. நாடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, குற்றங்கள் அகில உலக அளவில் ஒரு தொழில் நிறுவனத்தைப் போல் நடத்தப்படுகின்றன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 5, இத்திங்கள் முதல் உரோம் நகரில் நடைபெற்றுவரும் INTERPOL எனப்படும் அனைத்துலகக் காவல்துறையினரின் ஒரு கருத்தரங்கில் இச்செவ்வாயன்று, நாடுகளுக்கிடையே உறவுத் துறையின் திருப்பீடச் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
நாளுக்கு நாள் வளர்ந்துவரும் வன்முறைகளின் முன் நாம் செயலிழந்திருப்பது நன்னெறிக் கேள்விகளை எழுப்புகிறது என்று கூறிய பேராயர் மம்பெர்த்தி, குற்றங்களைக் களையும் முயற்சிகளும் அனைத்துலக அளவில் ஒன்றிணைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
குற்றங்களையும் வன்முறைகளையும் உலகில் குறைப்பதற்கு நல்லதொரு ஆரம்பம் நமது குடும்பங்கள் என்பதால், குடும்ப உறவுகளை உறுதிப்படுத்தும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில், அரசு மற்றும் சமுதாய நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று பேராயர் மம்பெர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.