2012-11-06 16:10:08

நைஜீரிய இஸ்லாமிய தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் கவனமுடன் செயல்பட அழைப்பு


நவ.06,2012. கடந்த பல ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கும் நைஜீரிய Boko Haram இஸ்லாமிய தீவிரவாத அமைப்புடன் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட எடுத்திருக்கும் முடிவு கவனமுடன் செயல்படுத்தப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு பேராயர் Felix Job.சவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் நைஜீரியாவின் முன்னாள் இராணுவத்தலைவர் இஸ்லாமிய தீவிரவாத குழுவின் பிரதிநிதியாகப் பங்குபெறுவது குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளார் Ibadan பேராயர்.
தங்கள் சுய உருவை வெளியிடாமலேயே போரிட்டு அப்பாவி மக்களைப் பலிவாங்கி வரும் Boko Haram குழுவின் பிரதிநிதியாக முன்னாள் இராணுவ தளபதி அறிவிக்கப்பட்டிருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்றார் பேராயர் Job.
Boko Haram இஸ்லாமிய தீவிரவாதக்குழுவின் முக்கியத் தாக்குதல்களின் இலக்காக கிறிஸ்தவக் கோவில்களே இருந்துவரும் நிலையில், அரசுடன் ஆன பேச்சுவார்த்தைகள் நிகழ்வதற்கு பொது இடமாக சவுதி அரேபியாவை அக்குழு தேர்ந்தெடுத்திருப்பது குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளார் நைஜீரியாவின் Bauchi ஆயர் John Goltok.








All the contents on this site are copyrighted ©.