2012-11-03 15:38:53

நவம்பர் 04, பொதுக்காலம் - 31ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு நமது ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்து வைக்கட்டும். இந்நிகழ்வை அன்னை சொன்னது போலவே கேட்போம்:
ஓரிரவு எங்கள் துறவு இல்லத்திற்கு ஒருவர் வந்தார். அவர் என்னிடம், "தாயே, அருகில் ஒரு குடும்பத்தில் எட்டுக் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் எல்லாரும் பல நாட்கள் பட்டினியாய் இருக்கிறார்கள்" என்று சொன்னார்.
நான் உடனே அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு அவ்வில்லத்திற்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி பரிதாபமாக இருந்தது. அக்குழந்தைகள் பட்டினியால் உடல் மிகவும் மெலிந்து, கண்கள் இருண்டு படுத்துக் கிடந்தார்கள். அந்தத் தாயிடம் நான் கொண்டுசென்ற உணவைக் கொடுத்து, குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொன்னேன். அவர் அதை நன்றியோடு பெற்றுக் கொண்டதும், அதில் பாதிப் பகுதியை எடுத்துக்கொண்டு வெளியேச் சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் வந்து குழந்தைகளுக்கு மீதம் இருந்த உணவைப் பரிமாறினார். அப்போது நான் அத்தாயிடம், "எங்கே அவ்வளவு அவசரமாய் பாதி உணவை எடுத்துச் சென்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அந்தத் தாய், "அடுத்த வீட்டுக்குச் சென்றேன். அங்குள்ளவர்களும் பல நாட்கள் பட்டினியாய் இருக்கிறார்கள்" என்று பதில் சொன்னார்.
ஓர் ஏழை மற்றோர் ஏழையுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை. என்னை அன்று ஆச்சரியமடையச் செய்தது மற்றொரு விடயம். பட்டினியால் வாடிக் கொண்டிருந்த அக்குடும்பத்தின் தாய், அதுவும், பட்டினியால் துடித்துக் கொண்டிருந்த தன் குழந்தைகளின் அழுகைக் குரலைத் தினமும் கேட்டுவந்தத் தாய் அடுத்த வீட்டில் உள்ளவர்களும் பட்டினியாய் இருந்தனர் என்பதைத் தெரிந்து வைத்திருந்தாரே என்பதுதான் என்னைப் பெரிதும் ஆச்சரியமடையச் செய்தது. பொதுவாக, நாம் துன்பப்படும்போது, நம்மைப்பற்றி மட்டுமே நமது கவனம் அதிகம் இருக்கும். அடுத்தவர்களைப்பற்றி சிந்திக்க நமக்கு மனமோ, நேரமோ, சக்தியோ, இருக்காது. ஆனால், இந்தத் தாயிடம் நான் கண்ட பரிவும், அன்பும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அன்னை தெரேசா பகிர்ந்துகொண்ட இந்த அனுபவம், அன்பின் ஆழத்தை, இலக்கணத்தை நமக்குச் சொல்லித் தருகிறது. கிறிஸ்தவ மறையின் ஆணிவேர் அன்பு. உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர் அன்புதான். இந்த அன்பு முப்பரிமாணம் கொண்டது. இந்த முப்பரிமாண அன்பைப்பற்றி இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித் தருகிறார்.

இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த ஒரு மறைநூல் அறிஞர் இயேசுவை அணுகியதாக இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்பது அவர் இயேசுவிடம் கேட்ட கேள்வி. இம்மறைநூல் அறிஞர் உண்மையைத் தேடுகிறார், ஏனைய மதத் தலைவர்களைப் போல், மறைமுக நோக்கங்களுடன், குதர்க்கமான எண்ணங்களுடன் இவர் கேட்கவில்லை என்பதை இயேசு உணர்ந்ததால், அவரிடம் கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான மூன்று கட்டளைகளைக் கூறுகிறார். இதனை அந்த மறைநூல் அறிஞருக்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் இயேசு கூறுகிறார். "இஸ்ரயேலே கேள்" என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு இம்மூன்று கட்டளைகளைக் கூறுகிறார்.

மூன்று கட்டளைகளா என்று நாம் ஆச்சரியப்படலாம். இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார் என்ற கேள்வியையும் எழுப்பலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், இரு அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்பு கொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘ஒருவர் தன் மீது அன்பு கூர்வதுபோல் அடுத்தவர் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். அடுத்தவர் மீது அன்பு கொள்வதற்கு ஓர் உருவகமாக தன் மீது கொள்ளும் அன்பைக் கூறியுள்ளார்.
இன்னும் சிறிது ஆழமாகச் சிந்தித்தால், இதை இயேசு ஒரு நிபந்தனையாகச் சொன்னார் என்றும் எண்ணிப் பார்க்கலாம். அதாவது, அடுத்தவர் மீது அன்புகூர்வதற்கு அடிப்படையாக, ஒருவர் தன் மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று இயேசு கூறுவதுபோல் தெரிகிறது. அன்பின் அரிச்சுவடி நமக்குள் ஆரம்பமாக வேண்டும். இந்த ஆரம்பப் பாடங்களைச் சரிவரப் பயிலாதவர்கள்... தங்கள் மீது நல்ல மதிப்பையும், அன்பையும் வளர்த்துக் கொள்ளாதவர்கள்... அடுத்தவர் மீது அன்பும், மதிப்பும் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். நம்மீது நாம் கொள்ளும் அன்பு, அக்கறை, மரியாதை என்ற அடித்தளம் சரியாக அமையவில்லையென்றால், அடுத்தவர் மீது அன்பு, ஆண்டவர் மீது அன்பு என்ற வானளாவியக் கோபுரங்களை நம்மால் எழுப்ப இயலாது.

நம்மீது நாம் காட்டும் அக்கறை, அன்பு இவற்றை சுயநலம் என்று தவறாக முத்திரை குத்தவேண்டாம். சுயநலம் என்பது உண்மையிலேயே ஒரு சிறை. சரியான, உண்மையான அன்பைச் சுவைக்காதவர்கள்தான் சுயநலத்தை வளர்த்துக் கொள்வார்கள். தன்னைப்பற்றிய சரியான மதிப்பும், மரியாதையும் இல்லாமல் போகும்போது, தன்மீது தனக்கே எழவேண்டிய உண்மையான அன்பு இல்லாமல் போகிறது. அது ஒருவரைச் சுயநலச் சிறைக்குள் தள்ளிவிடுகிறது. இந்தச் சிறைக்குள் 'நான்' என்ற ஒருவர் மட்டுமே வாழ முடியும். அங்கு அடுத்தவருக்கோ, ஆண்டவனுக்கோ இடமிருக்காது.

"உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டபோது எனக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி... திருப்தி... காரணம் என்ன? இந்தக் கட்டளையை நிறைவேற்ற என்னால் ஓரளவு முடியும் என்ற மகிழ்ச்சி அது. இயேசு தன் சீடரோடு இறுதி இரவுணவு அருந்துகையில் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இக்கட்டளையைவிட அதிகமான சவால் நிறைந்தது.
யோவான் நற்செய்தி 15 12-13
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

இயேசு என்மீது அன்பு கொண்டிருப்பதுபோல் நான் பிறர்மீது அன்பு கொள்ளவேண்டும் என்ற கட்டளை நான் கனவில் மட்டுமே காணக்கூடிய ஓர் இலட்சியம். ஆனால், என் மீது நான் கொண்டிருக்கும் அன்பையும், மதிப்பையும் அடுத்தவருக்கு வழங்க வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் கூறியிருக்கும் கட்டளை, நான் நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய ஒரு சவால்...

'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்று இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தார் மறைநூல் அறிஞர். இயேசுவின் வார்த்தைகளை முற்றிலும் ஏற்றுக்கொண்ட அவர், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, கடவுளிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ' என்று கூறினார் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.
மறைநூல் அறிஞர் ஒருவர் இவ்விதம் கூறுவது பெரும் ஆச்சரியம்தான். கோவில் சார்ந்த செயல்களும், அங்கு செலுத்தப்படும் காணிக்கைகளுமே இஸ்ரயேல் மக்களின் தலை சிறந்த கட்டளைகள் என்று நம்பி, அவ்விதமே மக்களையும் நம்ப வைத்தவர்கள் மறைநூல் அறிஞர்கள். அவர்களில் ஒருவர், அன்பு செலுத்துவது எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது என்று சொன்னது இயேசுவையும் வியப்படையச் செய்தது. அவர் மனப்பாடம் செய்த கட்டளைகளைக் கிளிப்பிள்ளைப் பாடமாய்ச் சொல்லாமல், அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்று தன் வியப்பையும், மகிழ்வையும் வெளிப்படுத்துகிறார்.

அன்பு செலுத்துவதையும், எரிபலிகளையும் இணைத்து, மறைநூல் அறிஞர் பேசியது அழகான ஓர் எண்ணம். ஆழமாகச் சிந்தித்தால், அன்புவாழ்வு உண்மையிலேயே ஒரு பலிவாழ்வு, தியாக வாழ்வு என்பதை உணரலாம். வெளிப்படையான பலிகளை விட நமது சொந்தப் பலிவாழ்வு எவ்வளவோ மேலானதுதான். இத்தகையத் தியாக வாழ்வைக் கூறும் பல்லாயிரம் சம்பவங்களை நாம் அறிவோம். அவைகளில் ஒன்று இதோ...
இவ்வாண்டு ஜூலை மாதம் 3ம் தேதி சீனாவில் நடந்த ஒரு நிகழ்வு இது. Deng Jinjie என்ற 27 வயது இளைஞர் ஓர் ஆற்றங்கரை ஓரமாக தன் இரு நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆற்றில் இளவயது தம்பதியரும், அவர்களின் ஐந்து வயது குழந்தையும் நீந்திக் கொண்டிருந்தனர். அக்குழந்தைக்குப் பாதுகாப்பாக, இடுப்பு வளையம் இருந்தது. திடீரென, அக்குழந்தை ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட பெற்றோர் அலறவே, இளைஞர் Deng Jinjie தனக்கு என்ன ஆகும் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல், அக்குழந்தையைக் காக்க ஆற்றில் குதித்தார். அந்த நேரத்தில், அப்பெற்றோரும் ஆற்றின் ஆழத்திற்கு இறங்கவே, Deng Jinjie அந்த மூவரையும் காக்க வேண்டியதாயிற்று. ஆற்று நீரின் வேகம் கூடிக்கொண்டே இருந்ததால், அவர் அதிக போராட்டத்திற்குப் பின், மூவரையும் கரைக்கு அருகே கொண்டுவந்து சேர்த்தார். அந்த போராட்டத்தில் அவர் தன் சக்தியை இழந்ததால், அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். ஒரு மணி நேரத்திற்குப் பின், அவரது உயிரற்ற உடல் கரைக்குக் கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவத்தின் மிகக் கொடூரமான ஓர் உண்மை என்னவென்றால், Deng Jinjieயால் காப்பாற்றப்பட்ட மூவரும் கரையை அடைந்ததும், தங்களைக் காப்பாற்றியவருக்கு என்ன ஆயிற்று என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கரையில் இருந்த தங்கள் காரில் ஏறிச் சென்றுவிட்டனர். நடந்தவைகளைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவர் அவர்களை இடைமறித்து, அந்த இளைஞனைப் பற்றி கேட்டபோது, "எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர்.
அன்பையும், சுயநலத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஒரு கண்காட்சித் திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில் பல பள்ளிக் குழந்தைகள் அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த ஓர் இளைஞர் அக்குழந்தைகளை எல்லாம் காப்பாற்றினார். பலமுறை தீக்குள் சென்று, குழந்தைகளைக் காப்பாற்றியவர், இறுதியில் அந்தப் புகை மணடலத்தில் மூச்சு முட்டி, மயங்கி விழுந்து தீயில் கருகி இறந்தார்.

Deng Jinjeக்கும், இந்திய இளைஞருக்கும், அவர்களால் காப்பாற்றப்பட்டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள் தங்கள் பெயர் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் இந்தத் தியாகச் செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை, அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே ஒரு உந்துதலால் அவர்கள் இத்தியாகச் செயல்களைச் செய்தனர். "தன் நண்பர்களுக்காக உயிரைத் தருவதை விட மேலான அன்பு இல்லை" என்று இயேசு சொன்னதையும் தாண்டி, Deng Jinjie, இந்திய இளைஞர் போன்ற பல தியாக உள்ளங்கள் அறிமுகமே இல்லாதவர்களைக் காத்த முயற்சியில் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

சுயநலமும், அன்பும் ஒன்றுதான் என்ற எண்ணங்கள் இவ்வுலகில் பெருகிவரும் வேளையில், பல்லாயிரம் தியாக உள்ளங்கள் வழியே, உண்மையான அன்பின் தெய்வீக இலக்கணத்தை நாம் இன்னும் உணர்ந்து வருகிறோம்.

நம் வாழ்வை இயக்குவது உண்மை அன்பு உணர்வுகளா அல்லது சுயநல உணர்வுகளா?








All the contents on this site are copyrighted ©.