2012-11-01 15:42:07

இலங்கையை எச்சரித்துள்ளது அனைத்துலக சட்டத்துறையினர் ஆணைக்குழு


நவ.01, 2012. இலங்கையில் அண்மைக்காலமாக நீதித்துறைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், சட்டத்துறை மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருவதையும் கண்டித்து அனைத்துலக சட்டத்துறையினர் ஆணைக்குழு செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நீதித்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்த அனைத்துலக சட்டத்துறையினர் ஆணைக்குழுவின் ஆசிய பணிப்பாளர் ஷேம் சராசி, நீதித்துறைக்கு எதிராக செயற்படுபவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாவிட்டால், எதிர்காலத்தில் இலங்கை தீய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.
மகிந்த ராஜபக்சாவின் நிர்வாகம் நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டு சர்வதேச சட்டங்களை மீறி வருவதாகவும் சராசி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கிடையே, பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான விண்ணப்பம், சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த்து.
இத்தகைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, குறைந்தபட்சம் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் தேவை என்ற போதிலும், 117 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.