2012-11-01 15:37:41

அனைத்துப் புனிதர் விழாவில் திருத்தந்தையின் மூவேளை செபஉரை


நவ.01, 2012. இவ்வியாழனன்று நாம் கொண்டாடிய அனைத்துப்புனிதர்கள் விழா, மனித குலத்தின் இரு எல்லைகளான 'மண்ணுலகம்' மற்றும் 'விண்ணுலகம்' குறித்து ஆழ்ந்து சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது என இவ்வியாழன் நண்பகல் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வரலாற்றுப் பயணத்தை குறித்து நிற்கும் பூமியும், முடிவற்ற நிலையின் அடையாளமாக நிற்கும் வானகமும் புனிதர்களின் ஒன்றிப்பு என்ற உண்மைத் தன்மையில் ஒன்றிக்கின்றன என்று கூறிய திருத்தந்தை, பூமியில் துவங்கும் உண்மை நிலைகள் வானுலகிலேயே தங்கள் முழுமையை அடைகின்றன எனக் கூறினார்.
மனித குலத்தை ஒன்றிணைக்கும் மறையுண்மையின் துவக்கம் திருஅவையே எனவும் கூறியத் திருத்தந்தை, இம்மறையுண்மை முற்றிலும் இயேசுகிறிஸ்துவை நோக்கியதாகவே இருக்கிறது என்றும், அவரே மனித குலத்தை இறைவனை நோக்கியும், அமைதி மற்றும் ஒன்றிப்பை நோக்கியும் அழைத்துச் செல்வதை அறிமுகப்படுத்தினார் என்றும் மேலும் கூறினார்.
சுயநலம் மற்றும் மரணத்தின் மீது அன்பு கொண்டுவந்த வெற்றியை அனைத்துப்புனிதர்களின் விழாவை நாம் சிறப்பிக்கும்போது கொண்டாடுகிறோம் என்ற திருத்தந்தை, முடிவற்ற வாழ்வில் நாம் ஆழமாக விசுவாசம் கொள்ளவும், உயிர்துறந்துள்ள நம் அன்புக்குரியவர்களுடன் உண்மையான ஒன்றிப்பை உணரவும், அன்னைமரி நமக்கு உதவுவாராக எனக்கூறி தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.








All the contents on this site are copyrighted ©.