2012-10-31 16:23:12

மும்பைச் சேரிகளில் 'புட்டி விளக்குகள்' என்ற புதிய திட்டம்


அக்.31,2012. மும்பையில் உள்ள ஒரு கல்லூரியின் மாணவர்களும், சுவிட்சர்லாந்திலிருந்து வந்துள்ள பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து, மும்பையில் உள்ள சேரிகளில் 'புட்டி விளக்குகள்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
மும்பையில் உள்ள புகழ்பெற்ற புனித சேவியர் கல்லூரி மாணவர்களும், சுவிட்சர்லாந்தின் புனித Gallen பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து எளிமையான பிளாஸ்டிக் புட்டிகளைக் கொண்டு சேரிகளின் இருளடைந்த வீடுகளில் ஒளியேற்றும் புதிய வழியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இந்த முறையில் எளிய ஒரு லிட்டர் பிளாஸ்டிக் புட்டியில் நீர் நிரப்பி, அதன் மேல் பாதி கூரையில் செய்யப்பட்டுள்ள ஓட்டையின் வழியே, சூரிய ஒளியில் வைக்கப்பட்டால், கீழ் பாதி புட்டி மூலம் 55 வாட் மின் விளக்கு உருவாக்கும் அளவு ஒளி அறைக்குள் பரவும் என்று சொல்லப்படுகிறது.
2002ம் ஆண்டு பிரேசில் நாட்டின் Alfredo Moser என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இம்முறை, பிலிப்பின்ஸ் நாட்டின் சேரிகளில் Illac Diaz என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இம்முறையால் மும்பை சேரிகளில் வாழ்வோர் மத்தியில் ஒளி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த முறையை உலகெங்கும் வாழும் பல கோடி ஏழைகள் இல்லங்களில் பரப்புவதே சுவிட்சர்லாந்து புனித Gallen பல்கலைக் கழகத்தின் நோக்கம் என்றும் Geraldine Ludi என்ற மாணவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.