2012-10-31 16:22:44

நம் தனிப்பட்ட வாழ்வில் காணப்படும் தீமைகளையும் களைந்திட தசரா விழா ஒரு வாய்ப்பாக அமைகிறது - டில்லி பேராயர்


அக்.31,2012. தீமைக்கு எதிராக நன்மையே வெல்லும் என்ற கருத்துடன் அண்மையில் இந்தியாவில் கொண்டாடப்பட்ட தசரா விழா, நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வில் காணப்படும் தீமைகளையும் களைந்திட ஒரு வாய்ப்பாக அமைகிறது என்று டில்லி பேராயர் Vincent Concessao கூறினார்.
இந்தியாவின் அரசியலில் காணப்படும் ஊழலை எதிர்த்து குரலெழுப்பி வரும் ஒன்றுபட்ட கிறிஸ்தவர்கள் தேசிய அமைப்பின் தலைவரான பேராயர் Concessao, அண்மைக் காலங்களில் இந்திய அரசியல் தலைவர்களின் ஊழல்கள் அம்பலமாகி வருவது நாட்டை இருளான பாதையில் தள்ளியுள்ளது என்று கூறினார்.
நேர்மையையும், உண்மையையும் உலகிற்குச் சொன்ன பல முக்கிய மதங்களின் ஊற்றாக விளங்கும் இந்தியா, தற்போது இந்த நன்னெறி விழுமியங்களிலிருந்து மிகவும் விலகியிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று பேராயர் தன் கவலையை வெளியிட்டார்.
இலஞ்சம் என்ற பெரும் நோயிலிருந்து இந்தியா மீள்வதற்கு, அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், முக்கியமாக, மக்கள் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்நோயை நாட்டிலிருந்து களைய இந்தியாவில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் இணைந்து செபிக்கவேண்டும் என்றும் டில்லி பேராயர் Concessao அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.