2012-10-30 15:29:30

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 141 பகுதி 3


RealAudioMP3 தண்டனை என்று சொன்னாலே நமக்கு எதிர்மறைக் கண்ணோட்டம்தான் உருவாகிறது. ஏனெனில், தண்டனை என்பது அவமானம். தண்டனைப் பெறும்போது, பிறர் நம்மை இகழ்வர் என்ற தீர்மானம் நமக்குள் இருப்பதால், இந்த எதிர்மறை எண்ணங்கள்... முடிந்தவரை, தண்டனையிலிருந்து தப்பிக்கவேண்டும், அல்லது, தண்டனையைக் குறைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும், தண்டிக்காமல் இந்த ஒரு முறை மன்னித்து விட்டுவிடக்கூடாதா? என்ற அங்காலாய்ப்பும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதே. தண்டனை பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணங்களின் ஒரு பக்கம் இது. தண்டனைக்கு மற்றொரு முகமும் இருக்கிறது.

எல்லா மனிதர்களும், எல்லா நேரத்திலும் தண்டனையிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. சில நேரங்களில், தான் செய்த குற்றங்களுக்குத் தண்டனைப் பெறவேண்டும் என்று மனித மனம் விரும்புகிறது. ஏனெனில், தண்டனை நம்மை திருத்திக்கொள்வதற்கான மருந்து. நாம் செய்த செயலினால் உருவான இழப்புக்கு செய்கின்ற ஈடு அல்லது நமது தவறால் நமக்குள் உருவான குற்ற உணர்விலிருந்து வெளிவருவதற்காக நாம் செய்கின்ற பாரிகாரம். தண்டனை பற்றிய நேர்மறை எண்ணங்கள் இவை என்று சொல்லலாம்.
குழுவாக இருக்கும்போதும், பிறர் முன்னிலையிலும் இவ்வகை மாற்று எண்ணங்கள் எழுவது அரிது. தனிமையிலும், முதுமையிலும் இவ்வகை எண்ணங்கள் ஆழமாக எழுகின்றன என்பதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தண்டனைப் பற்றிய இவ்வகை நேர்மறைச் சிந்தனை நமக்குள் வளர்ப்பதற்கு இன்றைய விவிலியத்தேடல் நமக்கு உதவியாக இருக்கும்.
மூன்றாவது வாரமாக நாம் தொடர்ந்து சிந்திப்பது திருப்பாடல் 141. தன் நாவும், இதயமும் தீய வார்த்தைகளைப் பேசாமலும், தீச்செயல்களின் ஊற்றாக அமையாமலும் இருக்க இறைவன் உதவவேண்டும் என்று தாவீது மன்னன் இத்திருப்பாடல் வழியே மன்றாடியதை, கடந்த இரு வாரங்களாகச் சிந்தித்தோம். இன்றைய நிகழ்ச்சியில் ‘பாவமும் பரிகாரமும்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு சிந்திப்போம். நம் சிந்தனைகளுக்கு உதவியாக, இப்பாடலின் 5வது சொற்றொடரை எடுத்துக்கொள்வோம்.
நீதிமான் என்னைக் கனிவோடு தண்டிக்கட்டும்; அது என் தலைக்கு எண்ணெய்போல் ஆகும்; ஆனால், தீயவரின் எண்ணெய் என்றுமே என் தலையில் படாமல் இருக்கட்டும்; ஏனெனில், அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய் நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.

யாரேனும் தண்டனை கொடுத்தால் அவர்கள் மீது கோபம்தான் வரும். ஆனால், தண்டனை கொடுத்தால் யாருமே கோபப்படாதச் சூழல் ஒன்றும் உள்ளது. நமக்கெல்லாம் நன்கு பழக்கமான ஒரு சூழல் அது... அதுதான் நாம் மேற்கொள்ளும் ஒப்புரவு அருட்சாதனம். ஒப்புரவு அருட்சாதனத்தில், செய்த பாவங்களுக்கானப் பரிகாரம் கொடுக்கப்படும்போது, அதற்கு மறுமொழியாக நன்றி என்று கூறுகிறோம். இந்த நன்றி ஒப்புக்காகவோ, அல்லது மனப்பாடம் செய்த மந்திரமாகவோ சொல்லப்படுவதில்லை. மாறாக, பெரும்பாலானோர் தங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்வதாகவே உணர்ந்திருக்கிறேன்.
ஒப்புரவு அருட்சாதனத்தில் நமக்குத் தரப்படும் பாவப் பரிகாரங்கள் சில நேரங்களில் கடினமானதாக இருந்தாலும், மனமாற்றத்திற்குத் தூண்டுகோலாக உள்ளன என்பதை மறுக்கமுடியாது. பரிகாரம் செய்யும்போது நாம் செய்த செயலின் ஆழத்தையும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த துன்பத்தையும் உணரமுடிகிறது. மீண்டும் அதேத் தவறைச் செய்யாமலிருக்க இந்தப் பரிகாரம் சரியான பாடத்தையும் கற்றுத் தருகிறது.
ஒப்புரவு அருட்சாதனத்திற்கு வரும் எல்லா மனிதரிடமும் இறைவன் எதிர்பார்ப்பது இரு செயல்பாடுகள். ஒன்று, செய்த பாவங்களுக்காக மனம்வருந்தி மன்னிப்பு வேண்டுவது. இரண்டு, இனி ஒரு போதும் இந்தப் பாவங்களைச் செய்வதில்லை என முடிவெடுப்பது, அதற்கான முயற்சி செய்வது, அதில் வெற்றி அடைவது.

‘நல்லது செய்தால் பரிசு, தகாதது செய்தால் தண்டனை’ என்ற தத்துவத்தில்தான் நாம் சிறு வயதிலிருந்தே வளர்க்கப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட மனநிலையுடன் வளர்க்கப்பட்டுள்ள நாம், யாரேனும் 10ரூபாயைத் திருடிவிட்டு, செய்த திருட்டை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது. மாறாக, திருடிய ரூபாயைத் திரும்பத் தரவேண்டும்... அதுதான் நீதி என்று சொல்வதில்லையா? இவ்வாறு, பிறருக்கு இழைத்த பாவத்திற்கானப் பரிகாரம் செய்யும்போது, பிறரோடு ஒப்புரவாகிறோம்.

பிறரோடு ஒப்புரவாவதை விடுங்கள். தனக்குள் தானே ஒப்புரவு ஆக முடியாத நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய செய்தி. இப்படிப்பட்டவருக்கா நான் இப்படி செய்துவிட்டேன்? நான் அவருடைய முகத்தில் விழிக்கக்கூட தகுதியில்லை என்று சொல்லுமளவுக்குக் குற்ற உணர்வுகள் வளர்ந்து, அவற்றிலிருந்து வெளிவரமுடியாமல் எண்ணற்றோர் தவிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். பிறரது மன்னிப்பைப் பெற்றபிறகும், தன்னைத் தானே மன்னிக்க முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. இப்படிப்பட்ட குற்ற உணர்விலிருந்து மனிதர்களை வெளிக்கொணர்வதிலும் பரிகாரம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

அண்மையில் செய்தித்தாளில் படித்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவில் ஒரு கடைக்கு முன் தன் மிதிவண்டியை விட்டுவிட்டு உள்ளே சென்று தன் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தவர் தன் மிதிவண்டியைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். அங்கும், இங்கும் தேடிவிட்டு மிதிவண்டி கிடைக்காத சோகத்தில், வீட்டிற்கு செல்லும் வழியில் மீண்டும் அந்தக் கடைப்பக்கம் வந்திருக்கிறார். அதே இடத்தில் அவருடைய மிதிவண்டியும் அதோடு ஒரு கடிதமும் இருந்தது. வேறுவழியில்லாமல் உங்கள் மிதிவண்டியைத் திருடிவிட்டேன். நீங்கள் பூட்டியிருந்ததால் பூட்டை உடைக்க வேண்டியாதாகி விட்டது. அதைச் சரிசெய்ய இக்கடிதத்தோடு 10 டாலர்கள் வைத்துள்ளேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று எழுதியிருந்ததாம். மிதிவண்டியை இழந்தவருக்கு அது மீண்டும் கிடைத்துவிட்டது. அவருடைய உடைந்த பூட்டை சரிசெய்யவும் 10 டாலர்கள் கிடைத்துவிட்டன. திருடியவர், திருடிய பொருளை அதற்கான இழப்பீட்டுடன் உரியவரிடமே ஒப்படைத்துவிட்டார். எனவே, அவருக்கும் குற்ற உணர்வில்லை. இவ்வாறு பரிகாரம் என்பது இருவருக்குமே நீதியையும், மன அமைதியையும் தருகிறது.

ஒவ்வொரு செயலுக்கும் எதிராகவோ, அதன் தொடர்ச்சியாகவோ மாற்று செயல்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். (To every action there is always an equal and opposite reaction.) நமது தவறான செயல்களுக்கும் பின் விளைவுகள் உண்டு. இவற்றால் ஏற்படும் ஒரு முக்கியமான விளைவு நமது உடல்நலக் குறைவு. தான் புரிந்த பாவம் தன்னிடம் ஏற்படுத்திய மாற்றங்களை தாவீது திருப்பாடல் 51ல் கூறியுள்ளார். இந்த பாதிப்புக்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் ஒரு வழியை தாவீது திருப்பாடல் 141ல் அழகான ஓர் உருவகத்துடன் சொல்லியிருக்கிறார்.
நீதிமான் என்னைக் கனிவோடு தண்டிக்கட்டும, அது என் தலைக்கு எண்ணெய்போல் ஆகும் என்று சொல்கிறார். எண்ணெய் மருத்துவ குணமிக்கது என்பது தொன்றுதொட்டு நம்பப்படுகின்ற கருத்து. திருமுழுக்கு, உறுதிபூசுதல், நோயில்பூசுதல் போன்ற அருட்சாதனங்களில் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு, எண்ணெயின் மருத்துவ குணமும் ஒரு காரணம். பாவத்தினால் தாவீதுக்கு வந்த உடல் மற்றும் உள்ள பாதிப்புக்கள், ‘நீதிமான்களின் தண்டனை’ என்ற எண்ணெய், அவர் தலையில் பூசப்படும்போது அவரை விட்டு அகலும் எனக் கூறுகிறார்.
அன்றாட மனித வாழ்விற்குத் தேவையான நடைமுறைக் கருத்துக்களை எளிதாகச் சொல்லும் நீதிமொழிகள் நூலும் இதே எண்ணத்தைக் கூறுகிறது:
நீதிமொழிகள் நூல் 6:23
கட்டளை என்பது ஒரு விளக்கு; அறவுரை என்பது ஒளி; கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி.

இன்றும்கூட தாவீதைப்போன்று, தான் செய்தது தவறு என்று உணரும் மனிதர்கள், அதற்கான தண்டனை அனுபவிப்பதற்கும், பரிகாரம் புரிவதற்கும் தயங்குவதில்லை. நல்ல மனச்சான்றுடையவர்கள் தாங்கள் செய்கின்ற தவறுகளை அறிந்து, அவற்றை திருத்திக்கொள்ள நினைக்கிறார்கள். தங்களுடைய தவறுகளை பிறர் சுட்டிக்காட்டும்போது, அவற்றை முழு மனதோடு ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல், தவறைச் சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றியும் சொல்வதிலிருந்து, அவர்களது நல்ல மனதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்நிலைக்கு நேர்மாறான எண்ணங்களும் உலகில் வளர்க்கப்படுகின்றன. வர்த்தகம், அரசியல், கலை, கல்வி, மருத்துவம், மதம் என்று அனைத்துத் துறைகளிலும் தவறான மனச்சான்றை வளர்க்கும் போக்குகள் பெருகிவருவது மிகவும் வேதனையைத் தருகிறது.
அண்மையில் இந்தியாவில் அரசியல்வாதி ஒருவரின் ஊழல் அம்பலமானது. அவர் ஏறத்தாழ 80 இலட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைப் பற்றி மற்றொரு அமைச்சர் பேசுகையில், "80 இலட்சம் என்ன ஒரு பெரும் தொகையா? எத்தனையோ பேர் கோடிக்கணக்கில் ஊழல்கள் செய்கின்றனரே" என்ற பாணியில் பேசியுள்ளார். 'அமைச்சர் சொல்வது சரிதான். பல்லாயிரம் கோடிகள் ஊழல்கள் நடக்கும்போது, 80 இலட்சம் ஊழல் பெரிதல்ல' என்று நாமும் இந்த அமைச்சருடன் சேர்ந்து எண்ண ஆரம்பித்தால், நாம் தற்போது எத்திசையில் செல்கிறோம் என்பதை உணரலாம். அரசியல் என்பதே மனச்சான்றை விற்றுவிட்டவர்களின் அரங்கம் என்று பேசிப் பேசி, பொதுத் துறைகளில் குற்றங்கள் மலிவதை நாம் சகித்து வருகிறோம். இது மனித சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தை வருவிக்கக்கூடிய மனநிலை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இத்தகைய மனிதர்களின் அறிவுரைகள் எனக்கு வேண்டாம். நீதிமான்கள் அல்லாத தீயவர்களின் வார்த்தைகள் எனக்கு வேண்டாம். அவை என் பாவங்களுக்கு மருந்தாகாது. மாறாக, என்னை மேலும் பலவீனமாக்கும் என்பதைத்தான் தீயவரின் எண்ணெய் என்றுமே என் தலையில் படாமல் இருக்கட்டும் என்று தாவீது சொல்கிறார். இதையொத்த சிந்தனையைத்தான் நீதிமொழிகள் 27:6 இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு சொல்கிறது.
நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை; பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.

எனவே அன்பார்ந்தவர்களே! நம்மைச் சுற்றியுள்ள நல்லோரின், நீதிமான்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்வோம். தண்டனைகள் மூலம் அவர்கள் காட்டும் பரிகார வழிகளில் நடைபயில்வோம். வர்த்தகம், அரசியல் போன்ற போலி உலகங்கள் கற்றுத்தரும் போலி மதிப்பீடுகளில் நம் சுயத்தை இழந்துவிடாமல் நம் பாவங்களுக்கு ஏற்ப பரிகாரம் செய்வதே நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள அயலாருக்கும் நல்லது என்பதை உணர்வோம். இதை அன்றே உணர்ந்து, வாழ்ந்த தாவீதின் வழி நடப்போம். இறைவன் துணைபுரிவாராக!








All the contents on this site are copyrighted ©.