2012-10-29 15:44:58

நைஜீரியக் கத்தோலிக்க ஆலயம் மீது தற்கொலை தாக்குதல்


அக்.29,2012. நைஜீரியாவின் வடபகுதியில் Kadona நகரின் கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் ஞாயிறு திருப்பலி நடந்து கொண்டிருந்த நேரத்தில் சக்தி மிக்க வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 7 பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இஞ்ஞாயிறு காலை 9 மணியளவில் திருப்பலி நடந்து கொண்டிருந்த போது, ஆலயச் சுவரில் ஒரு தற்கொலையாளி குண்டு நிரப்பிய வாகனத்தை மோதியதாக பிபிசி நிருபர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆலயத்தின் உட்புறத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளின் கூரைகள் வெடித்துச் சிதறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலால் கோபமடைந்த கிறிஸ்தவ இளைஞர்கள், அங்குத் தாக்குதலில் அகப்பட்டவர்களை மீட்கச் சென்ற அரசு வாகனம் ஒன்றை தாக்கியதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இசுலாமியரின் Eid al-Adha விழாவையொட்டி நைஜீரியாவில் தேசிய விடுமுறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் இச்சமயத்தில் Boko Haram என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழு, இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டில் Boko Haram குழு வன்முறையில் இறங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 2,800 பேர் இறந்துள்ளனர் என மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.