2012-10-29 15:33:35

கத்தோலிக்க ஆயர்கள் : சிரியாவில் கொல்லப்பட்டுள்ள அருள்பணி Fady Haddad ஒரு மறைசாட்சி


அக்.29,2012. சிரியாவில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை அருள்பணியாளர் ஒருவர் கொடூரமாய்க் கொல்லப்பட்டதற்குத் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ள தமஸ்கு கத்தோலிக்க ஆயர்கள், அந்நாட்டில் வெளிநாட்டுச் சதிவேலைகள் தீமையைப் பரப்பி அழிவை ஏற்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சிரியாவில் போரிடும் குழுக்களுக்கிடையே ஒப்புரவு ஏற்படவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள ஆயர்கள், அதிகரித்துவரும் ஆயுதப்புழக்கங்களும் இரத்தம் சிந்துதலும் வன்முறையும் நிறுத்தப்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
சிரியாவின் தலைநகர் தமஸ்கு நகருக்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள Qatana என்ற சிறிய நகரத்தின் St. Elias ஆலயத்தில் பங்குக் குருவாகப் பணியாற்றிய அருள்பணி Fady Haddad, இம்மாதம் 18ம் தேதி ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டார். ஆறுநாள்களுக்குப் பின்னர் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அருள்பணியாளர் Fady கொலை செய்யப்பட்டதையொட்டி, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும் தலைவர் 4ம் இக்னேஷியுசுக்கு இரங்கல் செய்தியும் அனுப்பியுள்ள தமஸ்கு கத்தோலிக்க ஆயர்கள், சிரியாவின் அனைத்து மறைசாட்சிகளுடன் இந்த அருள்பணியாளர் மறைசாட்சியையும் இறைவன் தமது வான்வீட்டில் சேர்த்தருள செபிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்பாவி குடிமக்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு எதிரானத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஆயர்கள், முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சமய உணர்வு உள்ள ஒவ்வொருவரும் மனிதாபிமான மற்றும் ஆன்மீகப் பணிகளுக்குத் தங்களை அர்ப்பணித்துள்ளனர் எனவும் ஆயர்களின் செய்தி கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.