2012-10-27 15:40:17

முப்பது வயதில் புகைப்பிடிப்பதைக் கைவிடும் பெண்கள், குறைந்த வயதில் இறக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கின்றனர்


அக்.27,2012. முப்பது வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும் பெண்கள், புகையிலைத் தொடர்புடைய நோய்களால் குறைந்த வயதிலே இறக்கும் ஆபத்திலிருந்து முழுமையாகக் காப்பாற்றப்படுகின்றனர் என்று Lancet மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
பிரிட்டனில் 12 இலட்சம் பெண்களிடம் எடுத்த ஆய்வின் முடிவில் இவ்வாறு கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கும் அந்த ஆய்வு, ஒரு நாளைக்குப் பத்து சிகரெட்டுக்கும் குறைவாகப் பிடிப்பவர்கள்கூட விரைவிலே இறக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கிறது.
உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்டோர் புகைப்பிடிப்பதால் இறக்கின்றனர். மேலும், ஏறக்குறைய 25 நோய்களுக்குப் புகைப்பிடித்தல் காரணமாக அமைகின்றது.
மனித உடலைப் பாதிக்கும் நான்காயிரம் வேதியப் பொருள்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவற்றில் எட்டு, புற்று நோய்க்குக் காரணமாக உள்ளன.







All the contents on this site are copyrighted ©.