2012-10-26 16:31:42

புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளவர்களின் நிலை


அக்.26,2012. இலங்கையில் போரின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்து, இறுதியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்குடியிருப்புப் பகுதி மக்கள் பாம்புகள் மற்றும் வெடிப்பொருள்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
மிகக் கடுமையாகப் போர் இடம்பெற்ற இப்பகுதிக் கிராமங்களில் அழிந்து கிடக்கின்ற வீடுகள் மற்றும் கட்டிடங்களிலும், அங்கு வளர்ந்துள்ள புதர்களிலும் பாம்புகள் நிறைந்திருப்பதாக மீள்குடியேறியுள்ள மக்கள் கூறுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடும் வறட்சிக்குப் பின்னர் மழை பெய்யத் தொடங்கியிருப்பதையடுத்து பாம்புத் தொல்லை அதிகரித்துள்ளது, அதேவேளை, புல்புதர்கள் நிறைந்து காடுபோல இருக்கும் அவ்விடங்களில் கண்ணிவெடிகளும் பலதரப்பட்ட வெடிப்பொருள்களும் அகற்றப்படாமல் இருப்பதால், நிலங்களில் நடமாடுவது ஆபத்தானதாக இருக்கிறது என்றும் அம்மக்கள் கூறியுள்ளனர்.
கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே, இந்தப் பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும், கண்ணிவெடிகள் நிலங்களில் முழுமையாக அகற்றப்படவில்லை என்று அம்மக்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.