2012-10-26 16:28:58

சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள உரையாடல் இடம்பெறும் நம்பிக்கை


அக்.26,2012. வருங்காலத்தில் சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள உரையாடல் இடம்பெறும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.
“சீனத் திருஅவைக்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய கடிதம் வெளியிடப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்” என்ற தலைப்பில் 2,500 வார்த்தைகளைக் கொண்ட செய்தி ஒன்றை, சீனக் கம்யூனிச அரசுக்கும் இலட்சக்கணக்கான சீனக் கத்தோலிக்கருக்குமென இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார் கர்தினால் Filoni.
இத்தாலியம், ஆங்கிலம், சீனம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள புதிய உரையாடல் இடம்பெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் கர்தினால் Filoni.
சீனக் கத்தோலிக்கர் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் குறிப்பிட்டுள்ள கர்தினால் Filoni, சீனாவில் சமய சுதந்திரம் குறைவாக இருப்பது குறித்த கவலையையும் தெரிவித்துள்ளார்.
சீனக் கம்யூனிசக் கட்சியின் தேசிய மாநாடு வருகிற நவம்பர் 8ம் தேதி தொடங்கவுள்ளவேளை, கர்தினால் Filoniயின் இச்செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.