2012-10-25 16:28:50

அக்டோபர் 24 கடைபிடிக்கப்பட்ட ஐ.நா. நாளையொட்டி ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்ட செய்தி


அக்.25,2012. நாம் வாழும் இன்றைய உலகில் அமைதியைக் குலைக்கும் பல முயற்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அமைதியையும், மனித உரிமைகளையும் மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகளும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
அக்டோபர் 24 இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட ஐ.நா. நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர், சிறந்ததோர் உலகை உருவாக்க தனி மனிதர்களும், உலக நிறுவனங்களும் இணைந்து உழைக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார்.
1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஐ.நா. அமைப்பின் கொள்கைகள் உலக அரங்கில் உறுதி செய்யப்பட்டதென்பதை நினைவுகூறும் வழியில், 1948ம் ஆண்டிலிருந்து அக்டோபர் 24ம் தேதி ஐ.நா. நாளென்று கடைபிடிக்கப்படுகிறது.
ஐ.நா. என்பது பன்னாட்டு அதிகாரிகள் சந்திக்கும் ஒரு அலுவலகம் மட்டும் அல்ல என்றும், அமைதிக்காக உழைக்கும் வீரர்கள், உடல் நலனை உலகெங்கும் கொண்டு செல்லும் உதவியாளர்கள் என்று பலரையும் உள்ளடக்கியது இந்த அமைப்பு என்றும் பான் கி மூன் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவிவரும் தொடர் நெருக்கடிகளைப் பற்றி குறிப்பிட்டுப் பேசிய பான் கி மூன், அங்கு வாழும் மக்களுக்கு கல்வி, நல வாழ்வு அனைத்தும் சமமான முறையில் கிடைப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் உழைக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
ஐ.நா. நாளையொட்டி உலகின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமையகத்தில் உலக அமைதி என்ற கருத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினர்.








All the contents on this site are copyrighted ©.