2012-10-24 15:32:24

முதுமையில் உடற்பயிற்சி மூளைக்கு நலமளிக்கும்


அக்.24,2012. அறுபது, எழுபது வயதுகளில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதைத் தடுக்க முடியும் என்றும், இதன் மூலம் வயது முத்ர்ச்சியுடன் தொடர்புடைய dementia எனப்படும் நினைவிழப்பு நோயைத் தடுக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அறுபது வயதுக்கு மேற்பட்ட 638 பேரிடம் மேற்கோண்ட ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
உடற்பயிற்சி என்றதும் ஏதோ கடினமான உடற்பயிற்சி தேவை என்பதல்ல; தினமும் நல்ல நடைபயிற்சி செய்தாலே, உரிய பலன் தரும் என்றும், அதேவேளை, மூளைக்கு வேலை தரும் சுருக்கெழுத்து, சொடோகு போன்ற விளையாட்டுக்கள் மூளை சுருங்குவதைத் தடுக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மூளையில் கட்டளைகள் உருவாகும் இடம் grey matter என்கிற சாம்பல் பகுதி என்றும், அந்த கட்டளைகளை கடத்தும் பகுதி white matter வெள்ளைப்பகுதி என்றும் இரண்டாக அறியப்படுகிறது.
வயதாக ஆக, மூளையின் சாம்பல் பகுதி சுருங்கும்போது, மனிதர்களின் நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும்.
தினசரி நடைப்பயிற்சி செய்வது, மூளை செல்களில் இரத்தச் சுழற்சியை அதிகப்படுத்துவதால் மூளை சுருங்காமல் தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே வயதான காலத்தில் மூளைத்திறனை நலமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள், தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பது ஆய்வாளர்களின் அறிவுரை.








All the contents on this site are copyrighted ©.