2012-10-24 15:19:52

திருஅவையில் திருப்புமுனைகள் - புனித ஜாக் பெர்த்தியு (Berthieu, Jacques 1838 to 1896


அக்.24,2012. பிலிப்பீன்ஸ் நாட்டு வேதியர் Peter Calungsod, இத்தாலிய அருள்பணி Giovanni Battista Piamarta, இஸ்பெயின் அருள்சகோதரி Carmen Salles y Barangueras, ஜெர்மன் பொதுநிலை விசுவாசி Anna Schaffer, அமெரிக்க ஐக்கிய நாட்டு Molokai அன்னை Marianne Cope, அமெரிக்கப் பொதுநிலை விசுவாசி Kateri Tekakwitha, பிரான்ஸ் நாட்டு இயேசு சபை அருள்தந்தை Berthieu Jacques ஆகிய எழுவரையும் அக்டோபர் 21ம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று புனிதர்கள் என திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்தார். இவர்கள் வெவ்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழல்களில் வளர்ந்தவர்கள். ஆயினும் இவர்கள் எல்லாருடைய நோக்கம் மட்டும் ஒன்றே ஒன்றுதான். இயேசு கிறிஸ்துதான் அவர்களது வாழ்க்கையின் ஒரே இலக்காக இருந்தது. அவருக்காக எந்தக் கடினமான சூழலிலும் வாழ்ந்தார்கள். அதனால் இவர்கள் காலம் காலமாய்ப் போற்றப்படுகிறார்கள். இந்த உலகு இருக்கும்வரையில் இவர்களது நினைவு என்றும் அழியாமல் இருக்கும்.
இந்தப் புதிய புனிதர்களுள் ஒருவர் இயேசு சபை அருள்தந்தை ஜாக் பெர்த்தியு. இவர் 1838ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிரான்சின் Monlogisல் பக்தியுள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆறு சகோதர சகோதரிகளுடன் மூத்த பிள்ளையாக இறைபக்தியில் வளர்ந்து வந்தார். மூத்த சகோதரி சிறுவயதிலே இறந்ததால், இவரே வீட்டுக்கு மூத்த பிள்ளையானார். Saint-Flour மறைமாவட்ட குருத்துவ இல்லத்தில் சேர்ந்து குருத்துவப் படிப்பை முடித்து 1864ம் ஆண்டு மே 21ம் தேதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவரது ஆயர் de Pompignac, இவரை Roannes-Saint Maryக்குப் பங்குத்தந்தையாக நியமித்தார். அங்குப் பணியாற்றிவந்த நோயாளியும் முதியவருமான குருவுக்குப் பதிலாக அருள்தந்தை ஜாக் பெர்த்தியு நியமிக்கப்பட்டார். நாள்கள் செல்லச் செல்ல துறவற வாழ்வு இவரைக் கவர்ந்தது. எனவே ஆயரின் அனுமதியோடு 1873ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி Pauவிலுள்ள இயேசு சபை புகுமுகுப் பயிற்சி இல்லத்தில் சேர்ந்தார். மறைபோதகராகச் செல்ல விரும்பினார். இது பற்றி இவர் தனது நண்பருக்கு 1875ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி எழுதிய கடிதத்தில், "நான் மடகாஸ்கர் நாட்டுக்குச் செல்லவிருக்கிறேன். ஆகஸ்ட் இறுதியில் Valsலிருந்து புறப்பட்டு மார்செய்ல்ஸ், சென்று அங்கிருந்து புறப்படுகிறேன், இனிமேல் ஒருவேளை பிரான்ஸ் திரும்ப மாட்டேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல்தான் அவரது வாழ்வு முடிந்தது.
1875ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி மடகாஸ்கரின் Tamataveஐசென்றடைந்தார் அருள்தந்தை பெர்த்தியு. Sainte-Marie தீவுக்குச் செல்லவேண்டுமென இயேசு சபைத் தலைவர்கள் சொன்னதால் அங்கேயே உடனடியாகப் புதிய மொழியைப் படிக்கத் தொடங்கி மறைபோதக வாழ்வுக்குத் தன்னைத் தயார்படுத்தினார். இந்தத் தீவு மடகாஸ்கர் தீவு நாட்டுக்கு கிழக்கில் அமைந்துள்ளது. இவர் விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்ததால் அங்கு காய்கறித் தோட்டம் போட்டு இல்லத்துக்குத் தேவையான காய்கறிகளைப் பயிர் செய்தார். 1880ம் ஆண்டில் Sainte-Marie தீவில் அரசு ஒரு புதிய ஆணை பிறப்பித்தது. அதன்படி ப்ரெஞ்ச் காலனிகளில் அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரமின்றி பணிபுரியும் தடைசெய்யப்பட்ட துறவற சபைகள் வெளியேற வேண்டுமென்பதே அவ்வாணை. இயேசு சபையினர் அத்தீவைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. Sainte-Marie, 1750ம் ஆண்டுமுதல் பிரான்சோடு இணைந்திருந்தது. அருள்தந்தை பெர்த்தியு 1881ம் ஆண்டின் தொடக்கத்தில் Sainte-Marieயை விட்டு வெளியேறினார். மடகாஸ்கர் தீவு நாட்டின் Ambohimandrosoவிலுள்ள மறைப்பணித் தளத்துக்கு அனுப்பப்பட்டார். பிரான்சுக்கும் மடகாஸ்கருக்கும் இடையே இடம்பெற்ற சண்டையினால் 1883ம் ஆண்டு ஜூன் மாதத்தில், 9 குருக்கள், 7 அருள்சகோதரர்கள், 4 குளூனி சபை அருள் சகோதரிகள் என 20 பேருடன் Mananjaryவுக்குச் சென்றார் அருள்தந்தை பெர்த்தியு. பலநேரம் நடந்தே போக வேண்டிருந்தது. அங்கிருந்து Tamatave சென்றார். அங்கு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடினமான வாழ்வு வாழ்ந்து ஒரு சிறிய மறைப்பணித்தளத்தையும் ஏற்படுத்தினார். பின்னர் அங்கிருந்து அந்நாட்டின் வடகிழக்கிலுள்ள Vohemar சென்றார். புதிய நாட்டில் அடுத்தடுத்துப் புதிய சூழல்களில் வாழவேண்டிய கட்டாயம்.
பிரான்சுக்கும் மடகாஸ்கருக்கும் இடையே இடம்பெற்ற சண்டை முடிந்ததன் அடையாளமாக 1885ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் தான் பணி செய்த இடத்துக்கு மீண்டும் திரும்புவோம் என்ற நினைத்திருந்தார் அருள்தந்தை பெர்த்தியு. ஆனால் அவர் Ambositra மறைப்பணித்தளங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1886ம் ஆண்டுமுதல் 1891ம் ஆம்டு வரை அங்குப் பணி செய்தார். மறைப்பணித்தளங்களை விரிவுபடுத்தினார். கடினமான வாழ்வு என்று அவர் எழுதிய குறிப்புகள் கூறுகின்றன. எட்டுமணிநேரம் குதிரைப் பயணம். உணவின்றி தண்ணீரின்றிப் பயணம் செய்து இயேசு கிறிஸ்துவை அறிவித்தார். தனியாகவே உழைத்து 18 மறைப்பணித்தளங்களை உருவாக்கினார். மீண்டும் பிரான்சுக்கும் மடகாஸ்கருக்கும் இடையே சண்டை தொடங்கியது. இதனால் 13 மாதங்கள் இக்குரு வேறு இடம் செண்றார். ஆயினும் இந்தச் சண்டை விரைவில் முடிந்துவிட்டாலும் மடகாஸ்கர் புரட்சியாளர்களின் வன்முறை தொடங்கியது. மூதாதையரின் வழிபாடுகள் புறக்கணிக்கப்பட்டதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அரசியல், மதம் என்ற வேறுபாடின்றி இந்தப் புரட்சியாளர்கள் வெளிநாட்டவர் எல்லாரையும் தாக்கினர். Andrainarivo பகுதிக்குச் சென்ற இந்தப் புரட்சியாளர்கள் அங்கிருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற வேண்டுமென்று வற்புறுத்தினர். எனினும் அருள்தந்தை பெர்த்தியு அங்கேயே இருந்து அந்த மக்களுக்குப் பணிபுரிவதற்கு உறுதி எடுத்தார். தனது காயம்பட்ட குதிரையையும் அங்கு ஒருவருக்குக் கொடுத்துவிட்டார். 1896ம் ஆம்டு ஜூன் 8ம் தேதி Menalamba வின் ஒரு புரட்சிக்கும்பலில் சிக்கினார். அவர்கள் அவரைப் பிடித்து, "உனது மதத்தையும் இந்த மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்வதையும் கைவிடு" என்று அச்சுறுத்தினர். ஆனால் அருள்தந்தை Berthieu முழங்கால்படியிட்டு, அக்கும்பலிடம், "இந்தச் செயலை நிச்சயமாக என்னால் செய்ய இயலாது. மாறாக நான் இறப்பதற்கும் தயார்" என்று சொன்னார். சில நிமிடங்களில் அருள்தந்தை Berthieu அந்தப் புரட்சிக்கும்பலின் துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானார். அப்புரட்சிக் கும்பல் அவரது உடலை தரதரவென Mananara வரை இழுத்துச் சென்று தண்ணீரில் வீசியது. 1964ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி திருத்தந்தை 6ம் பவுல், அருள்தந்தை Berthieuவை மறைசாட்சி எனவும், 1965ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அருளாளர் அறிவித்தார். 2012ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவரைப் புனிதர் என அறிவித்தார்.
மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவத்தின் வித்து. இயேசுவுக்காக வாழும் வாழ்க்கையில் அவர் தம்பிள்ளைகளைக் கைவிடுவதில்லை. மாறாக தலைமுறை தலைமுறைதோறும் வாழ்த்தப்படும் அளவுக்கு அவர்களை உயர்த்துகிறார். இறைவனுக்காக வாழும் வாழ்வு என்றும் புனிதமானது, சவால் நிறைந்தது.







All the contents on this site are copyrighted ©.