2012-10-22 16:13:37

இலங்கையில், ஒன்பது லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதற்கு அமெரிக்க விருது


அக்.22,2012. இலங்கையில், விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டில் முடிவுற்றபின், ஒன்பது லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
இந்தக் கடின பணியை மேற்கொண்ட குழுவுக்கு, அமெரிக்காவில், "மார்ஷல் லெகசி இன்ஸ்டிடியூட்' (Marshall Legacy Institute) என்ற நிறுவனம், விருது வழங்கி கௌரவித்தது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சண்டையின் போது, விடுதலைப் புலிகள், இராணுவத்தை தடுக்க, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், கண்ணி வெடிகளை புதைத்தனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த, 5,000 சதுர கி.மீ., பரப்பளவில், 80 சதவீத கண்ணி வெடிகள், அகற்றப்பட்டு விட்டதாக, இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை சிதைக்கும், ஐந்து இலட்சம் கண்ணி வெடிகளும், பீரங்கிகளை தகர்க்கும், 1,500 கண்ணி வெடிகளும், தொட்ட உடனே வெடிக்கும், நான்கு இலட்சம் கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டுள்ளன. கண்ணி வெடி அகற்றும் குழுவில், இந்திய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
உயிருக்கு அச்சுறுத்தலான, இந்த கடினப் பணியை செய்ததற்காக, டி.கே.என்.ரோகன் தலைமையிலான கண்ணி வெடி அகற்றும் குழுவுக்கு, அமெரிக்காவில், "மார்ஷல் லெகசி இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனம், விருது வழங்கி கௌரவித்தது.
அத்துடன், கண்ணி வெடிகளைக் கண்டறியும் பயிற்சி பெற்ற, 26 மோப்ப நாய்களும், இந்த குழுவுக்கு, அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.