2012-10-22 16:11:32

13வது உலக ஆயர்கள் மாமன்றம் : இத்திங்கள் நிகழ்வுகள்


அக்.22,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் கடந்த இரண்டு வாரங்களாக முன்வைத்த பரிந்துரைகளைத் தொகுக்கும் பணியில் இத்திங்களன்று ஈடுபட்டது ஒரு சிறப்புக் குழு.
உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுத் தொகுப்பாளரான வாஷிங்டன் கர்தினால் Donald Wuerl, இம்மாமன்றத்தின் சிறப்புச் செயலரான பிரான்சின் Montpellier பேராயர் Pierre-Marie Carrè, சிறிய குழுக்களின் தொகுப்பாளர்கள் ஆகியோர் சேர்ந்து இப்பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் தயாரிக்கும் இந்தத் தொகுப்பு, இவ்வுலக ஆயர்கள் மாமன்றத் தந்தையரின் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட பின்னர், இந்த ஆயர்கள் மாமன்றத்தின் இறுதியில் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்படும்.
13வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவடைந்த பின்னர் திருத்தந்தை வெளியிடும் அப்போஸ்தலிக்க ஏட்டுக்கு இந்தத் தொகுப்புப் பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.
இம்மாதம் 7ம் தேதி தொடங்கிய 13வது உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற ஞாயிறன்று திருத்தந்தையின் திருப்பலியோடு நிறைவடையும்.
மேலும், 1800களின் தொடக்க காலத்தில் மறைசாட்சிகளான இரண்டு இளம் கொரியத் தம்பதியர் பற்றிய திரைப்படத்தைப் பார்ப்பதற்கு திருப்பீடத்துக்கான தென்கொரியத் தூதரகம் மாமன்றத் தந்தையர்க்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.
“John மற்றும் Rugalda, இரண்டு கன்னிமைத் தம்பதியர்” என்ற இத்திரைப்படம் திரையிடப்படுவது இத்திங்கள் மாலை இவ்வுலக ஆயர்கள் மாமன்றத் திட்டத்தில் உள்ளது.








All the contents on this site are copyrighted ©.